“கட்டா குஸ்தி_2” படத்தின் விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி, ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், யோகி பாபு, முனிஷ் காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கட்டா குஸ்தி_2”.

கதைப்படி.. கட்டா குஸ்தி முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே படம் துவங்குகிறது. வீரா ( விஷ்ணு விஷால் ) கீர்த்தி ( ஐஸ்வர்யா லெட்சுமி ) தம்பதியினர் ரயில்வே காலனியில் பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். தான் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மனைவியை தேசிய மல்யுத்த வீராங்கனை போட்டிக்கு தயார் செய்வதோடு, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளையும், குழந்தை பராமரிப்பு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, வீட்டு கணவனாக ( ஹவுஸ் ஹஸ்பன்ட் ) வாழ்ந்து வருகிறார் வீரா.

கீர்த்தி விளையாட்டில் அடுத்தடுத்த உயரங்களை எட்டும் போது, அவருக்கு தடையாக பயிற்சியாளர் சதி வேலைகளில் ஈடுபடுகிறார். அதில் வீரா பகடைக்காயாக பயண்படுத்தப்படுகிறார். இதனால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. இவர்கள் இருவருக்கு மத்தியில் குட்டிக் குழந்தை தந்தை மீதுள்ள பாசத்தில் தவிக்கிறது.

இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினை தீர்ந்ததா ? கீர்த்தி மல்யுத்த விளையாட்டில் சாதித்தாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

படத்தின் தொடக்கத்திலிருந்து கதையின் போக்கிலேயே ஆங்காங்கே நகைச்சுவையுடன் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக கருணாஸ், காளி வெங்கட், லிசி ஆண்டனியின் காட்சிகள் மற்றும் குழந்தை நட்சத்திரம் டயலாக் சிறப்பு. அதேபோல் படத்தின் இறுதியில் கணவன் மனைவி இருவரும் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஆண், பெண் இருவரும் சமம் என வாழ்ந்தாலே பிரச்சினைகள் இல்லை என்பதையும், சமூகத்திற்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, விளையாட்டு வீராங்கனை குழந்தை பெற்ற பிறகும் சாதிக்க நினைப்பது, மனைவியின் கனவை நிறைவேற்ற கணவன் வீட்டை கவனித்துக் கொள்வது என முற்போக்கு சிந்தனையில் காட்சிகளை ரசிக்கும்படியாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இந்த வாரம் வெளியான படங்களில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கட்டா குஸ்தி_2 அமைந்துள்ளது. குடும்பத்துடன் முகம் சுளிக்காமல் பார்க்கக் கூடிய படம் என்றே சொல்லலாம்.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன காட்சிகளில் வரும் கதாப்பாத்திரம் கூட முக்கியத்துவம் பெறுகிறது.

Exit mobile version