
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில், சத்யா கரிகாலன், ஈரா சரவணன் தயாரிப்பில், பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில், பாரி இளவழகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அன்பே டயானா”.
கதைப்படி… வடசென்னை பெரம்பூரில் வசிக்கும் கிருஷ்ணா ( பாரி இளவழகன் ) அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண் மேஜிக் ( ரம்யா ரங்கநாதன் ) காதலிக்கிறார். இருவரும் சிறுவயது முதல் ஒன்றாக படித்தவர்கள். குடும்பத்தில் தாய் சரளா ( ரோஜா ) சாதி உணர்வு மிக்கவர். தனது ஜாதியில் அவரது தம்பி மங்கபாபு ( செல் முருகன் ) மகளை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இதற்கிடையில் காதலி கிருஷ்ணாவை திருமணம் செய்ய வற்புறுத்த, மேஜிக் மாடன் பெண்ணாக இருப்பதால் தனது குடும்பத்திற்கு ஒத்து வராது என, ஒதுங்கி செல்கிறார். இருவருக்கும் பிரச்சினை, குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகிறது.
குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து, காதலர்கள் இணைந்தார்களா என்பது மீதிக்கதை..
இயக்குனர் பாரி இளவழகன் பெரம்பூர் பகுதி மக்களின் வாழ்வியலை அச்சு அசலாக அப்படியே பிரதிபலித்ததோடு, அம்மாவுக்கு பயந்தவராக, காதலியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பவராக பெரம்பூர் பையனாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், குடும்பம், நட்பு, காமெடி, கலாச்சாரம் என நவரசம் கலந்து திரைக்கதை அமைத்து கலக்கியிருக்கிறார்.
தந்தையாக சேத்தன் தனது சிறப்பான நடிப்பால், கதை கலகலப்பாக நகர்த்தியிருக்கிறார். அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரோஜா திரையில் தோன்றினாலும், தெலுங்கு பாரம்பரிய குடும்ப குத்து விளக்காக முத்திரை பதித்திருக்கிறார். பரிதாபங்கள் கோபி பெங்களுர் நண்பனாக கலக்கியிருக்கிறார்.