துல்கர் சல்மானின் “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்” (I am Game) திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி திரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.

வெளியான டிரெய்லர் தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கண்கவர் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அளவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் தோன்றுவது டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.

இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசை டிரெய்லரில் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் வழங்கியுள்ள காட்சியமைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
“லோகா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள “ஐ ஆம் கேம்”, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version