நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.
“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது, இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.
டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
நடிகை கௌதமி பேசியதாவது,
‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.
சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது. இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.
பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம் என்றார்.
நடிகை சமந்தா பேசியதாவது,
சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.