“யானை” விமர்சனம் – 3/5

இராமநாதபுரத்தில் திருநெல்வேலியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ராஜேஷின் பி.ஆர்.வி குடும்பம் மிகவும் கொளரவமான குடும்பமாக வாழ்ந்து வருகிறது. அந்த குடும்பத்தில் சமுத்திரக்கனி, போஸ்வெங்கட், சஞ்சீவ் ஆகியோர் ராஜேஷின் முதல் மனைவிக்கும், அருண் விஜய் இரண்டாவது மனைவிக்கும் என நான்கு மகன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அண்ணன்கள் மூவர் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அருண் விஜய்யை அவர்கள் மூவரும் மாற்றான் தாய் மகனாகவே பார்க்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அருண் விஜய்யின் நண்பர்களால் சமுத்திரத்தின் மகனுடன் மோதல் ஏற்பட்டு ஒருவர் இறந்து விடுகிறார். இந்த பிரச்சினையில் சமுத்திரம் குடும்பத்திற்கும் பி.ஆர்.வி குடும்பத்திற்கும் தீராத பகை ஏற்படுகிறது.

இதனால் சமுத்திரத்தின் மகன் பி.ஆ.ர்வி குடும்பத்தை அழிப்பதற்காக சிறையிலிருந்து வெளியே வருகிறார். அதை சுமுகமாக முடிக்க நினைக்கிறார் அருண் விஜய். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், அனைத்தும் தோல்வி அடைகிறது. அப்போது சமுத்திரக்கனி மகள் இஸ்லாமிய மாணவனை காதலித்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் குடும்பமே உருக்குலைந்து போகிறது. இந்தப் பிரச்சினையில் அருண் விஜய் சிக்கிக் கொள்கிறார். அருண் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

அதன்பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா ? சமுத்திரத்தின் குடும்பத்தால் பி.ஆர்.வி குடும்பத்தினருக்கு ஏற்பட்ட ஆபத்தை அருண் விஜய் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை.

அருண் விஜய் வழக்கம் போல் இல்லாமல் இந்தப் படத்தில் ஆக்ஷ்ன், காதல், சென்டிமென்ட், பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராதிகா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகி ப்ரியா பவானி சங்கரும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சமுத்திரக்கனி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இயக்குனர் ஹரி தனது முந்தைய படங்களின் சாயலை தொடர்ந்திருக்கிறார். இராமநாதபுரத்தை கதையின் களமாக வைத்துள்ள ஹரி அந்த பகுதியின் வட்டார மொழியை தவிர்த்து முழுக்க முழுக்க அந்தப் பகுதியின் மக்கள் நெல்லை தமிழை பேசுவது போல் கதையை நகர்த்தி இருக்கிறார். வழக்கம் போலவே தனது ஜாதி பாசத்தை புகுத்தியுள்ளார். படத்தில் நகைச்சுவை என்கிற பெயரில் சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹரி படம் வருவதால், இவர் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வித்தியாசத்தை எதிர்பார்த்தது படம் பார்க்கச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். வியாபார ரீதியாக படம் தப்பித்து தயாரிப்பாளரை காப்பாற்றும்.

Exit mobile version