கோவை மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் பட்டா இடத்தோடு வனத்துறையின் இடத்தையும் வளைத்து கட்டப்பட்டிருக்கும் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார் அருள்நிதி. காட்டுப் பகுதியில் கல்லூரி அமைந்துள்ளதால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இந்நிலையில் தனது வகுப்பு மாணவி திடீரென சிறுத்தை அடித்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அடுத்தடுத்து சில சம்பவங்கள், ஒரே மாதிரியான மரணங்கள் நடக்கிறது.
இறந்த மாணவிகள் தங்களின் விடுதி வளாகத்தில் பார்த்ததாக ஒரு உருவத்தை வரைந்து வைத்துள்ளார்கள். அந்த வரைபடங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்கள் வரைந்தது. ஆனால் ஒரே உருவம் தான் வரையப் பட்டிருக்கிறது. இந்த உருவத்தை கண்டுபிடிப்பதற்காக கல்லூரியின் கட்டுப்பாட்டை மீறி பெண்கள் விடுதிக்குள் சக மாணவர்களுடன் செல்கிறார் கதாநாயகன். இதனால் எதிர்பாராத விதமாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கான பின்புலம் என்ன? யார் காரணம்? மர்ம மரணங்கள் எவ்வாறு நடக்கிறது? என்பதை க்ரைம், த்ரில்லர் பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல்பாதி சஸ்பென்ஸ் த்ரில்லருடன் கதையை நகர்த்தி இடைவேளைக்குப் பிறகு படத்தின் கதையை அறிய எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. படத்தில் கொலையாளி கதாபாத்திரத்தின் உருவத்தை இடைவேளைக்கு முன்பு பலமாக சித்தரித்து காண்பித்த இயக்குனர், இடைவேளைக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தின் மீதான பலம் குறைத்துள்ளது.
பெரும்பாலும் அருள்நிதி கதையை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக செயல்படுவார். ஆனால் “D பிளாக்” கதையை தேர்வு செய்யும்போது கோட்டை விட்டுவிட்டரோ எனத் தோன்றுகிறது. படத்திற்கு இசை பலம் சேர்த்துள்ளது.