தமிழக அரசு திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் திரைப்பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது.
இதில் தமிழ் திரை உலகில் முன்னணி சண்டைப் பயிற்சியாளரும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஜாக்குவார் தங்கமும் ஒருவர். திரைத்துறை பிரபலங்கள், சினிமா கலைஞர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியாகவும், நேரிலும் தெரிவித்து வருகின்றனர்.
கலைமாமணி விருது பெற்ற ஜாக்குவார் தங்கம் நமது செய்தியாளரிடம் கூறுகையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம். திரைத்துறையில் எம்ஜிஆர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு சண்டை பயிற்சியாளராக நான்கு மொழிப் படங்களில் பணிபுரிந்துள்ளேன். நான் படப்பிடிப்பில் இருக்கும்போது தான் இந்த செய்தியே எனக்கு தெரிவிக்கப்பட்டது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக சில வருடங்களாக இருக்கிறேன். இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் திரைத்துறை நண்பர்கள் மிகவும் சிரமப்பட்டனர். எங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது அரசுடன் சேர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினேன்.
சமீபத்தில் தான் தமிழக அரசின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது முதல்வர் பழனிச்சாமி வழங்கினார். சில நாட்களிலேயே தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு விருது வழங்க காரணமாக இருந்த தேர்வுக்குழு அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும், விருது வழங்கிய தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நமது இதழ் சார்பாகவும் கலைமாமணி ஜாக்குவார் தங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
சூரிகா