தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.
இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.” திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமே’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன். சினிமா மீது இயக்குநர் டீகேக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது” என்றார்.
இயக்குநர் டீகே பேசுகையில், இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்.
படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அவர் ஒரு பட்ஜெட்டையும் நிர்ணயித்தார். படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் எனக்கு புதிது. நடிகை ஆத்மிகா, நடிகர் வைபவ். ஆனால் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
நான் பலமுறை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ‘காட்டேரி’ வெளியாகி, ரசிகர்களை சந்தித்து, வெற்றி பெறும்.” என்றார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், ” சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.
படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார்.” என்றார்.