கிராக்பிரைன் புரொடக்ஷன்ஸ் ( Crackbrain Productions ) தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில்… திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சிறு பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்துகிறார்கள் இங்கிருக்கும் தொழிலாளரகள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினியிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன்.
இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை அதை வெளியிடுவது தான் கஷ்டம். மக்கள் படம் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் படத்தை வெளியிட முடிவதில்லை. பல சிறு பட்ஜெட் படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்திப் பேசினார்.