தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும், “குண்டான் மலை” இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் கோரிக்கை

ராஜீவ் காந்தி தயாரிக்க, திருப்பூர் குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குண்டான் மலை படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராஜீவ் காந்தி பேசும்போது,
எங்கள் பயணம் கொரோனா காலத்தில் இருந்து ஆரம்பமானது. குறும்படமாக ஆரம்பித்து பெரிய திரைப்படமாக உருவாகிவிட்டது. மன்மதராசா பாடலுக்கு நடனமாடினேன். அப்போதுதான் தீனா சார் அறிமுகம். இந்த படத்தின் பட்ஜெட் சிறிது சிறிதாக ஆரம்பித்து பல லட்சங்களைத் தாண்டி விட்டது. இருப்பினும் அனைவரின் உழைப்பினால் படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

இசையமைப்பாளர் தீனா பேசும்போது, பான் இந்தியா படங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படம் பான் தமிழ்நாடு படம் போல் இருக்கிறது. சேலம், கோயமுத்தூர், ஆத்தூர் என்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நடித்திருக்கிறார்கள். நான் திருடா திருடி படத்தில் பணியாற்றிய குழு போல் இருக்கிறது. படங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் டிக்கெட் விலையில் 120 ரூபாய் என்றில்லாமல், 60 ரூபாய் என்று ஸ்லேப் சிஸ்டம் செய்து கொடுத்தால் அனைவரும் சென்று பார்ப்பார்கள். எந்த படமாக இருந்தாலும், முதல் நாளிலேயே வியாபாரம் செய்ய முடியும். அந்த சூட்சுமத்தை சிறிய படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை. குடும்பமாக இருந்து ஈகோ இல்லாமல் பணியாற்றியிருக்கும் இப்படகுழுவினருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தைப் பார்க்கும் போது புதியதாக இயக்கியது போல் தெரியவில்லை. சிறிய படங்கள் தான் சினிமாத் தொழிலாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் படத்தை எதற்காக வேறு மாநிலங்களில் எடுக்கிறீர்கள். பெப்சி தலைவர் செல்வமணி 75% தமிழ் நாட்டில் எடுத்துவிட்டு 25% மட்டும் வெளியே செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். மலையாள திரையுலகம், ஆந்திரா திரையுலகம் அவர்களின் தொழிலாளர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், தமிழ் திரையுலகினர் மட்டும் தான் தமிழ் திரையுலக தொழிலாளர்களை விட்டு மற்றவர்களை வாழ வைக்கிறார்கள். எனக்கு 4 வயது இருக்கும் போதே அப்பா இறந்து விட்டார். அம்மா வீட்டு வேலை செய்து தான் காப்பாற்றினார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தான் என்னை படிக்க வைத்தார்கள். ஆகையால், நானும் இயலாதவர்களின் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழக அரசு 8% வரியைக் குறைக்க வேண்டும். ஏழை மக்கள் 30, 40, 60 ரூபாயில் பார்க்கும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் சிறிய அரங்கம் கட்டி தர வேண்டும். இது போன்று பல கோரிக்கைகளுடன் விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளேன் என்றார்.

விழாவின் இறுதியில், குண்டான் மலை படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.

Exit mobile version