செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் நடிகை மீனாட்சி பேசுகையில்…
விக்ரமை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார் அது அவரிடத்தில் மிகவும் பிடிக்கும்.
நடிகை மிருணாளினி பேசுகையில்…
முதலில் விக்ரமுடன் நடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் ரசிகையாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. மிக அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.
நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி பேசுகையில்…
தமிழில் எனக்கு முதல் படம், படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக சிறப்பான படைப்பாக வந்துள்ளது என்றார்.
நடிகர் சீயான் விக்ரம் பேசுகையில்…
நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன் அப்போதே செயிண்ட் ஜோசப் கல்லூரி பிடிக்கும். இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ’கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது, அதைத்தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ஃப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது என்றார்.
நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரமின் உருவப்படம் வரைந்த பெயிண்டிங்கை பரிசாக அளித்தார்கள்.