சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. கணித புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், ‘கோப்ரா’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம் உண்டாகி இருக்கிறது. இதனை மேலும் தூண்டும் வகையில் சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினர் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களைச் சந்திப்பதற்காக ஹைதராபாத் வந்தடைந்தனர்.
சீயான் விக்ரம் தலைமையிலான ‘கோப்ரா’ குழுவினருக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, தயாரிப்பாளர் என்.வி. திருப்பதி பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் என் வி திருப்பதி பிரசாத் பேசுகையில், ” கோப்ரா திரைப்படம் கொரோனா தொற்று காலகட்டத்தில் ரஷ்ய நாட்டில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகும் முழுமையான பாதுகாப்புடன் ரஷ்யாவில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இது போன்ற கதாபாத்திரங்களில் தென்னிந்தியாவிலேயே விக்ரம் ஒருவரால் தான் ஏற்று நடிக்க இயலும். இந்தியாவிலேயே கமல்ஹாசனுக்கு அடுத்து உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரம் தன்னிகரற்றவராக திகழ்கிறார். கோப்ரா திரைப்படம் வித்தியாசமான கதை. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியுடன் உருவாகி இருக்கிறது. இந்தியாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். புஷ்பா இயக்குநர் சுகுமார் நிகழ்த்திய மாயாஜாலத்தை போல், இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் கோப்ரா படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார். கொல்கத்தா, அலிப்பி, சென்னை, ரஷ்யா என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து கோப்ரா படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். விக்ரமின் கலை உலக பயணத்தில் இந்த கோப்ரா மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும். கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் பேராதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.
சீயான் விக்ரம் பேசுகையில், ” கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவால் இங்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டு இருக்கிறார். எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த கதையை விவரிக்கும் போது உடனே நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர்.. இதனை கடந்து தான் நடித்தேன். எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி.. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.
கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது.
மிருணாளினி ரவி என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட்… என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.
மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம்.
நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம். தெலுங்கு ரசிகர்களுக்கு கோப்ரா படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். கோப்ரா திரைப்படம் உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படைப்பாக உருவாகி இருக்கிறது.
நம் தேசத்தில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் கோப்ரா படத்திலும் இருக்கிறது.
என் நடிப்பில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படபிடிப்பின் போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்ற போது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. கோப்ரா திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
கோப்ரா போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் தான் பொருத்தமானவர் என ஆவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தை தெலுங்கில் வழங்குகிறார்.” என்றார்.
ஊடக சந்திப்பில் நடைபெற்ற சுவாரசியமான விசயங்கள்…
• இந்த ‘கோப்ரா’ திரைப்படத்தில் கணித ஆசிரியர் வேடத்தில் நடித்தாலும், நான் மாணவனாக இருந்தபோது கணித பாடத்தில் பலவீனமான மாணவனாகவே இருந்தேன். ஆசிரியர் பலமுறை தலையில் குட்டி, ‘உனக்கு கணக்கு வராதுடா…’ என தெரிவித்தார். இந்த படத்தில் நடித்திருக்கும் கணிதாசிரியர் வெட்க சுபாவம் உள்ளவராக இருந்தாலும், அசாத்தியமான திறமைசாலி. இவருக்கு ஹாலுஸிநேஸன் என்ற பாதிப்பும் இருக்கும். இயக்குனர் அஜய் ஞானமுத்து பயங்கர புத்திசாலி. படத்தின் இரண்டாம் பகுதியில் தான் என்னுடைய கதாபாத்திரத்தின் வீரியத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். உச்சகட்ட கட்சி வரை கதை சுவாரசியமாக பயணிக்கும்.
• கோப்ரா என்றால் எப்போது தாக்கும் என்று தெரியாது. கோப்ரா ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தோலை உரித்து கொண்டு புது வடிவத்தை பெறும். அதேபோல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
• படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன். ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்.