திரையுலகில் பெரும்பாலான கதாநாயகிகள் திருமணம் ஆனபிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தொண்ணூறு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை அமலா. இவரும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து குடும்பத்தினரோடு நாட்களை கழித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட குடும்பப்பாங்கான “கணம்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
“கணம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை அமலா பேசுகையில்… நான் ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதெல்லாம் எனக்கு கிடைக்கும் அன்பு, வரவேற்பு திரையுலக ரசிகர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும் போது சொந்த வீட்டிற்குத் திரும்பியதைப் போல் உணர்கிறேன். நான் தமிழ் சினிமாவில் பணியாற்றிய ஏழு ஆண்டுகளில் சிறந்த தொழிற்நுட்ப கலைஞர்கள், திறமையான சிறந்த இயக்குனர்கள், இளையராஜாவின் அற்புதமான சிறந்த இசை என நிறைந்திருந்தது. ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் அந்தப் படம் கண்டிப்பாக வெற்றிதான் என ஒவ்வொரு இயக்குனரும் சொல்வதைப் பார்த்திருக்கிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்கான சூழல் தற்போதுதான் அமைந்தது. “கணம்” படத்தின் இயக்குனர் ஶ்ரீ கார்த்திக் என்னை சந்தித்து கதையை விளக்கிச் சொன்ன விதமும், கதையும் அழகாக இருந்தது. அப்படி ஒரு கதையை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியான உணர்வு எனக்குள் ஏற்பட்டதால் இதில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். வழக்கத்திற்கு மாறான ஒரு படம், மூன்று கதாப்பாத்திரங்களின் பயணமே படத்தின் கதை. இதில் நாயகன் ஷர்வானந்தின் கதையில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது.
தற்போது பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவர்கள் நினைக்கும் எதையும் சாதிக்க முடிகிறது. நான் வாழும் காலத்திலேயே இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி. எனது தாய் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அந்தக் காலத்தில் இந்தியப் பெண்களுக்கு இல்லாத ஒரு சுதந்திரத்தோடு அவர் வாழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரமாக இருத்தல், மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் என்றாலே உடைகளும், வாழும் முறையும் தான் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அதற்கேற்ற சிந்தனை ஓட்டத்தைப் பற்றி யாரும் சொல்வதில்லை. எனக்கு அதுதான் முக்கியமானதாக இருந்தது. நான் நம்முடைய பாரம்பரிய உடையை அணிந்து தான் கல்லூரிக்குச் சென்று வந்தேன். மேற்கத்திய ஆடைகளை அணிவது தான் சுதந்திரம் என்று நான் நினைக்கவில்லை. சுதந்திரமாக சிந்திப்பதே மனதின் சுதந்திரம் என்று நினைத்தேன். இப்போது அதை அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஏன் சினிமாவிலும் அனைத்துத் துறைகளிலும் பெண்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
“கணம்” படத்தின் கதை குறித்து மேலும் பேசுகையில்…. மூன்று சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தில், ஒவ்வொரு தோல்விக்குப் பிறகு எழுவது எப்படி என்பதை அழகாக, கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதில் நகைச்சுவை, அதிர்ச்சி, அதிர்ச்சியின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் புரிதல் , நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி என்பதை உணர வைக்கும். விழுந்தால் எழுந்திரு என்பதைச் சொல்லி, நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையைத் தரும் படம்தான் இந்த “கணம்” திரைப்படம் என்றார்.