சென்னையில் கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கட்டணம் வசூலித்து தனியார் கராத்தே அமைப்பு நடத்திய முகாமில் ஒன்றிய அரசு அதிகாரி கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே கொரானா வைரஸ் உருமாறி தனது கொடிய முகத்தை காட்டி லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டுவிட்டது.
நமது நாட்டை உலுக்கிய கொரானா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக பொதுமுடக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் பல்வேறு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துகொரானா தொற்றை கட்டுப்படுத்த போர்கால நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கொரானா வைரஸ் தற்போது குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழக மக்களின் உயிரைக்காக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர முயற்சி எடுத்து மக்களை காத்துவருகிறது. இந்நிலையில் அதிக மக்கள் கூடும் விழாக்கள் மற்றும் விளையாட்டு,கலாச்சார நிகழ்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் திருமணத்திற்கு 50 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் அடையாறு இந்திரா நகரில் ஒய்.எம்.ஏ. உள் அரங்கில் தனியார் கராத்தே அமைப்பு சார்பில் கடந்த 11.07.2021 அன்று பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சி முகாமில் வெளிநாட்டை சேர்ந்த கராத்தே மாஸ்டர் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ள கட்டணமாக ரூபாய்.1000 செலுத்தினால் மட்டுமே அனுமதி என அழைப்பிதழ் அச்சிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. உள் அரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்று அரசின் கட்டுப்பாடுகளை மீறி கட்டணம் வசூல் செய்து முகாம் நடத்தியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனியார் அமைப்பு கட்டணம் வசூல் செய்து இது போன்று நடத்தும் முகாமில் ஒன்றிய அரசின் அதிகாரி ஒருவர் கலந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஊரடங்கு காலத்தில் பல்வேறு விளையாட்டு அமைப்புக்கள் தமிழக அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு எந்த ஒரு போட்டிகளையும் நடத்தவில்லை. இந்த நிலையில் இது போன்ற தனியார் கராத்தே அமைப்பு தமிழக அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்திவிட்டு ஒன்றிய அரசின் அதிகாரியை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி சமூக வளைதளங்களில் பதிவிட்டு விளம்பரபடுத்துவது என்பது தங்களை கேள்வி கேட்க ஆள் இல்லை என்பதை காட்டுகிறது.
மேலும் சென்னையின் பிரதான பகுதியான அடையாறில் உள்ள உள் அரங்கில் விதிமுறைகளை மீறி இந்த அளவு ஆட்களை எவ்வாறு அனுமதித்தனர்? வெளி நாட்டில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்சியில் கலந்துகொள்ள முறையாக தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதா? அரசு நடத்தும் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொள்பவர்களுக்கு கொரானா பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் நடந்த தனியார் கராத்தே முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? முறையாக காவல்துறையில் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பன போன்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுவதாக அரசின் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்துவரும் தமிழக முதல்வர் இது போன்று தனியார் அமைப்புக்கள் நடத்திய நிகழ்சியில் கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்படிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.