2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் டி. எஸ். நாகபரணா தலைமையிலான குழு 2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்தது.
பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
‘செலோ ஷோ’வில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இந்த படத்தை ஒரு மனதாக தேர்வு செய்ய காரணமாக இருந்தது.
‘செலோ ஷோ’ என்பது வெளிநாட்டில் பொதுவாக காட்டப்படும் வழக்கமான இந்திய சினிமா போல் இல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு திரைப்பட ஆர்வலர்களின் உணர்ச்சிகளையும் தொடும் ஒரு திரைப்படமாகும். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான கதைக்களத்தில், சினிமாத்துவத்துடன், சிறப்பான நடிப்பு, ரம்மியமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலி தரத்தில் துல்லியமாக இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது.
இந்த அனுபவம் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும். கதை புதுமையாக ஆரம்பித்து நம்பிக்கை தரும் விதத்தில் முடிவடையும்.
படம் முடிந்த பின்னும் அதில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மனதில் நிற்கும். படத்தில் கூறுவது போல சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் கதைகளைச் சொல்லும் ஒளியை நாம் கண்டறிவோம்.
‘செலோ ஷோ’ உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு படமாகும்.