கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது “சாட் பூட் த்ரி” திரைப்படம்.

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கி சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள “சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப்பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) வழங்கப்பட்டது.  சாட் பூட் த்ரி திரைப்படத்தின் விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முனைவர் பு. பாஸ்கரன், செயலாளர், செயற்பாட்டுக்குழுவினர் கலந்துகொண்டு இயக்குனரை வாழ்த்தி தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கினர்.
பின்னர் இப்படம் கொரிய மக்களுக்கு திரையிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற குழந்தைகளுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் இடையேயான காட்சிகள் தமக்கு நெருக்கமாக இருந்ததாக கொரிய மக்கள் தெரிவித்தனர். 2016-ஆம் ஆண்டு முதல் நடக்கும் இந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் விருதுபெறும் முதல் இந்திய திரைப்படம் “சாட் பூட் த்ரி” என்பது குறிப்பிடத்தக்கது.


நிகழ்வு பற்றி கருத்து வெளியிட்ட படத்தின் இயக்குனர், நாடு, மொழி உள்ளிட்ட காரணிகள் கடந்து கொரியாவில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு “அன்பிற்கோர் பஞ்சமில்லை” என்ற தன் படத்தின் மூலக்கருவை உள்ளபடியே இயல்பில் உணர்த்தியது தமக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் விருதிற்கான விண்ணப்பங்கள் பன்னாட்டு அளவில் பெறப்பட்டு செப்டம்பர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன. புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர்களான சாங் பியோம் கோ, சாங் ஜே லிம், மற்றும் கிவி தோக் லீ ஆகியோர் அடங்கிய குழு விருதிற்கான படங்களை தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தமது கொரிய வருகையின் ஒரு பகுதியாக முனைவர் பாஸ்கரனும் படத்தின் இயக்குனரும் இந்திய தூதரகம் சென்று இந்திய தூதர் அமித் குமார், துணைத்தூதர் சுரீந்தர் பகத், பண்பாட்டுத்துறை செயலாளர் முனைவர் சோனு திரிவேதி ஆகியோரை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் கொரியாவில் தமிழ் உள்ளிட இந்திய திரைப்படங்களை வணிகரீதியாக கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடினர். கொரிய மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் கொரிய மக்களுக்கிடையே இருக்கும் நல்ல வரவேற்பு, தமிழ் திரைத்துரையின் உலகளாவிய வீச்சு மற்றும் வளர்ச்சி குறித்து இயக்குனர் தூதரிடம் எடுத்துரைத்தார்.


சாத் பூட் திரி உள்ளிட்ட சிறந்த தமிழ்ப்படைப்புகளை கொரிய மக்களிடம் கொண்டுசெல்ல தம்மாலான அணைத்து உதவிகளையும் செய்வதாக தூதரும் பண்பாட்டுத்துறை செயலாளரும் தெரிவித்தனர். இந்திய தூதரகம் சென்று கொரியாவில் தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை வணிகரீதியில் கொண்டு செல்வது குறித்து உரையாடிய முதல் இந்திய திரைப்பட இயக்குனர் அருணாச்சலம் வைத்யநாதன் என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version