வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னை வடபழனியிலுள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர் ,பாடலாசிரியை கிருத்திகா நெல்சன், பின்னணி இசையமைப்பாளர் தரண் குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, கலை இயக்குநர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ” நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஸ்பெஷலான திரைப்படம். இது ஒரு மோட்டிவேஷனல் கதை. இந்தப் படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. ‘ஓ மை கடவுளே’ படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், அதைவிட கூடுதலாக இந்தப் படம் ஏற்படுத்தும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்தப் பட குழுவினரும் அதிசயமான அனுபவம் கிடைத்தது. ரோதங் பாஸ் எனுமிடத்தில் பனி படர்ந்திருக்கும். இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, பட குழுவினர் அனைவரும் அங்கு சென்றோம். அங்கு சென்றவுடன், இது பனி விழும் சீசன் இல்லையென்று தெரிய வந்தது. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் முகத்திலும் கவலை ஏற்பட்டது.. சென்னையிலிருந்து புறப்பட்டு இவ்வளவு தொலைவு வந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நடத்தத் தொடங்கினோம். கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. எனக்கும், ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினோம். சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தூறத் தொடங்கியது. 10 ,15 நிமிடத்திற்குள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது. நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து கொள்கிறோம். உணர்வு மேலிட, இயக்குநரின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன. அங்குள்ள மக்கள், ‘இந்த சீசனில் பனி பொழிய தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது’ என்ற தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டு, அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்து கொண்டே படப்பிடிப்பை நடத்தினோம். சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம். ” என்றார்.