கவிப்பேரரசு வைரமுத்துவை நிறுவனர் மற்றும் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் வெற்றித் தமிழர் பேரவையின் புதுச்சேரி பிரிவின் சார்பாக (04-11-2022) அன்று புதுவைத் தமிழ் சங்க அரங்கத்தில் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பனின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுச்சேரி, வெற்றித் தமிழர் பேரவையின் அமைப்பாளர் தீந்தமிழ்த் தென்றல் தி.கோவிந்தராசு வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. புதுச்சேரி அரசின் சட்டப்பேரவைத் தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். எழுத்தாளர் ராசி அழகப்பனின் சந்திப்பில் கிடைத்த சிகரங்கள் நூலினைப் புதுச்சேரி அரசின் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் தமது சிறப்புரையில்
எழுத்தாளர் ராசி.அழகப்பன் கடந்த நாற்பதாண்டுக் கால கலை, இலக்கியப் பணிகளைப் பாராட்டியதோடு நூலில் இடம்பெற்றுள்ள தலைசிறந்த ஆளுமைகளுடனான தமது நட்பினைச் செய்ந்நன்றியோடு நூலாசிரியர் பதிவுசெய்துள்ள பண்பினை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார்.
கவிப்பேரரசு தலைமையில் இயங்கும் வெற்றித் தமிழர் பேரவையின் செயல்பாடுகள் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நூலினைப் பெற்றுக் கொண்டு பைந்தமிழ்க் காவலர் வீர. பாலகிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினார். நூலின் அறிமுக உரையினை வழங்கிய நற்றமிழ் நாவலர் முனைவர் நா.இளங்கோ தமிழில் அதிக முக்கியத்துவம் பெறாத கட்டுரை என்ற இலக்கிய வகைமையை ஆசிரியர் திறம்படக் கையாண்டுள்ள சிறப்பையும் பல்வேறு ஆளுமைகளைப் பதிவுசெய்யும் இந்நூல் கட்டுரைகளின் ஊடாகத் தமது வாழ்க்கை வரலாற்றை நுட்பமாக எழுதிச் செல்லும் நேர்த்தியையும் பாராட்டினார்.
விழாவிற்குத் சு. கோதண்டராமன் ப. காண்டீபன் க. மதன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறிஞர் இரா. தேவதாசு, காவியப் பாவலர் இராமதாசு காந்தி, வேட்டவலம் கவிஞர் முகில்வண்ணன், தகைமிகு ம. வீரட்டீஸ்வரன், தமிழாசிரியர் சின்ன சேகர், பேராசிரியர் செ. குமரன் ஆகியோர் நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நூலாசிரியர் ராசி. அழகப்பன் ஏற்புரை வழங்கினார். அச்சமயம் தமது நாற்பதாண்டு காலப் போராட்ட வாழ்க்கையில் பல்லாற்றானும் துணைநின்று என்னை உயர்த்திவிட்ட சிகரங்களை நினைவு கூர்ந்ததில் தாம் பெரிதும் மனநிறைவு எய்தியுள்ளதாக நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
நிறைவாக கவிஞர் குமரவேல் பட்டாபி நன்றியுரை வழங்கினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாக வந்திருந்து நூல் வெளியீட்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவையின் பொறுப்பாளர்கள் நூல் வெளியீட்டு விழாவினைச் சிறப்பாகத் திட்டுமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விழாவினை வெற்றியடையச் செய்தனர்.