விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & ஆர். டி. டீம் ஒர்க் நிறுவனங்கள் சார்பில், விஷ்ணு விஷால் & ரவி தேஜா தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ” கட்டா குஸ்தி”
கதைப்படி… கேரள மாநிலம் பாலக்காட்டில் வசிக்கும் கீர்த்தி ( ஜஸ்வர்யா லெட்சுமி ) சிறு வயது முதல் குஸ்தி போட்டியில் அதீத ஆர்வம் கொண்டு, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் வரன்கள் ஏற்பாடு செய்யும் போது, கீர்த்தி குஸ்தி வீராங்கனை என்பதால் திருமண ஏற்பாடுகள் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது.
பொள்ளாச்சி அருகே கிராமத்தில் பெற்றோர் இல்லாமல் தாய் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து வரும் வீரா ( விஷ்ணு விஷால் ) கபடி விளைடிக் கொண்டு வேளை வெட்டி இல்லாமல் சுற்றித் திரிகிறான். வீராவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது மாமா கருணாஸ் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வருகிறார். போகும் இடங்களிலெல்லாம் பெண் குறைவாக படித்திருக்க வேண்டும், முடி நீளமாக இல்லை என தட்டிக் கழித்து விடுகிறார் வீரா.
இந்நிலையில் ஆயிரம் சொற்களைச் சொல்லி திருமணம் செய்யலாம் என்கிற பழமொழிக் கேற்ப சில சொற்களைச் சொல்லி வீராவுக்கும், கீர்த்திக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். பின்னர் இருவரும் சுமூகமாக வாழ்க்கையை தொடங்குகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் உன்மை வெளிச்சத்திற்கு வர இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். கீர்த்தியின் மன நிம்மதிக்காக குஸ்தி போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுக்கிறார் அவரது தந்தை. இதை அறிந்த வீரா கோபம் கொண்டு மனைவிடன் மோதி ஜெயிக்க நினைக்கிறான். கபடி வீரரான வீரா, குஸ்தி வீராங்கனை கீர்த்தியுடன் குஸ்தி போட்டியில் கலந்து கொண்டாரா ? இல்லையா ? பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பது மீதிக்கதை….
கணவனுக்கு ஆபத்து நேரும்போது கிராப் வெட்டிய தோற்றத்தில் சேலையை இடுப்பில் சொருகி எதிரிகளை பந்தாடும் சண்டைக்காட்சி, குஸ்தி போட்டியில் எதிராளியை தூக்கி வீசும் காட்சி, தங்கையை கேளி செய்ததற்காக பொறுக்கிகளை விரட்டி விரட்டி அடிக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும், கிராமத்தில் அப்பாவி பெண்ணாகவும் அற்புதமாக நடித்து படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றுள்ளார் ஜஸ்வர்யா லெட்சுமி.
வேலை வெட்டி இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் கிராமத்து இளைஞனாக விஷ்ணு விஷால் கதைக்குத் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இது வரை இவர் நடித்த படங்களில் இவருக்கு கிடைத்த பெயரைவிட இந்தப் படம் இவரை வேற லெவலுக்கு உயர்த்தும் என்றே சொல்லலாம்.
மனைவியை அடக்கி ஆள வேண்டும் என கருணாஸ் பாடமெடுக்க அதை அப்படியே மனைவியிடம் பிரதிபலிக்கும் காட்சி, குஸ்தி போட்டிக்கு பயிற்சி பெறும் காட்சிகள், இறுதி காட்சிகளிலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் விஷ்ணு விஷால்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பப் பாங்கான திரைக்கதையை அமைத்து, ரசிக்கும்படியாக எதார்த்தமான வசனங்களை எழுதி, படம் பார்ப்பவர்களை பரவசமடையச் செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். சண்டை காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. பாடல்கள், பின்னணி இசை இசையமைப்பாளர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
ஆணாதிக்க சிந்தனையில் அதீத நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் கதாப்பாத்திரத்தில் கருணாஸ் நகைச்சுவையுடன் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வாழ்கையில் ஜெயிக்கனும்னா… மனைவியிடம் விட்டுக் கொடுத்துப் போனால்தான் வாழ்க்கை வசந்தமாகும் என்பதை தனது வசனங்களிலும், காட்சிகள் மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
ஒட்டு மொத்தத்தில் இந்த ஆண்டின் சிறந்த குடும்ப பாங்கான திரைப்படம் என்கிற விருது இந்தப் படத்திற்கு கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றே சொல்லலாம்.