வினோ இயக்கத்தில் ஷாம், ஶ்ரீ, ராம்ஜி, வசுந்தரா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி வெங்கட்ராமன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் புராஜெக்ட் – சி, சாஃப்டர்-2 ( project – C, chaptar -2 )
கதைப்படி… ஶ்ரீ என்கிற இளைஞர் B.sc, வேதியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் போது, தெரிந்தவர் மூலமாக தண்ணீர் கேன் கம்பெனியில் வேலையில் சேர்கிறார். அங்கு இவரை ஒரு பெண் விரும்புகிறார். அது அந்த கம்பெனியின் ஓனருக்கு பிடிக்காததால் வேலையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அதன்பிறகு வேலையில்லாத விரக்தியில் குடிக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.
பின்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வயதான முதியவரை பராமரிப்பதற்காக அங்கேயே தங்கி வேலை செய்கிறார். அந்த வீட்டில் சமையல் வேலைக்கு ஒரு பெண் இருக்கிறார். இருவரும் பேசும் போது இவரை விட அவரது கணவருக்கு முப்பது வயது அதிகம் எனவும், குடிகாரன் எனவும் கூறுகிறாள். அதன்பிறகு இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்படுகிறது.
இதற்கிடையில் அந்த பெரியவருக்கு பிசியோதெரபி சிகிச்சையளிக்க ஷாம் அடிக்கடி வந்து போகிறார். ஒருநாள் இரவு நேரத்தில் தொலைபேசி அழைப்பு மூலம் ஶ்ரீயிடம் ஒருவர் மாத்திரை கேட்டு பேசுகிறார். அந்த மாத்திரைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக கூறுகிறார். அதன்படி சில லட்சங்களை பெற்றுக்கொண்டு அவர் கேட்ட மாத்திரையை கொடுக்கிறார். அதன்பிறகு அந்த பெரியவரின் அறைக்குள் சென்று அங்கிருந்த டைரியை பார்க்கும் போதுதான் தெரிகிறது அவர் ஒரு விஞ்ஞானி என்பது.
அவர் கண்டுபிடித்த மருந்தை உட்கொள்ளும் போது, இருபத்தைந்து வயது குறைந்த மனிதனின் செயல்பாடுகள் தென்படும் சக்தி வெளிப்படும் என்பதும், அந்த சோதனையில் சிலர் மரணித்த சம்பவங்களும் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கான ஃபார்முலாவையும் ஶ்ரீ கைப்பற்றுகிறான். இதனைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து பதுக்கி வைக்க துவங்குகிறான்.
ஒருநாள் வேலைக்காரியிடம் நெருக்கமாக இருக்கும் போது என்னிடம் பணம் நிறைய இருக்கிறது நாம் எங்காவது போய் நிம்மதியாக வாழலாமா என கேட்கிறான் ஶ்ரீ . அதன்பிறகு மறுநாள் ஒரு மெக்கானிக் பையனுடன் ஶ்ரீ யை தாக்கி கட்டிவைத்து பணத்தை கேட்டு சித்திரவதை செய்கின்றனர். அந்த சமயத்தில் ஷாம் ஃபார்முலாவைத் தேடி வருகிறார். வேலைக்காரியின் திட்டம் நிறைவேறியதா ? ஷாமிற்கு ஃபார்முலா கிடைத்ததா ? ஶ்ரீ யின் கனவு நிறைவேறியதா ? விஞ்ஞானி என்ன ஆனார் என்பது மீதிக்கதை….
இந்தப் படத்தில் கதையின் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டிற்குள்ளேயே நகர்வது போல் திரைக்கதை அமைத்து அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்