12 வயது பள்ளி மாணவி இயக்கத்தில் உருவாகியுள்ள “குண்டான் சட்டி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரிப்பில், 12 வயது பள்ளி மாணவியான அகஸ்தி கதை எழுதி இயக்கியுள்ள படம் “குண்டான் சட்டி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பேரரசு, இயக்குனர் உதயகுமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

“குண்டான் சட்டி” திரைப்படத்தின் கதை சம்பந்தமாக படக்குழுவினர் கூறுகையில்… கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன.  குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். 

குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாக படிக்கிறார்கள்.  அவர்களது கிராமத்தில் கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக ஏமாற்றுகிறார்கள். இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். இருவரும் வாழைத்தோப்புக்காரர், சலவை தொழிலாளி, குதிரைக்காரன், பேராசை கிராமம் என அவர்களிடமும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டி பணம் சேர்க்கிறார்கள். 

குண்டானும், சட்டியும் மீண்டும் ஊருக்குள் வர… இவர்களால் பாதிக்கப்பட்ட பண்ணையார், சேட்டு, வியாபாரி மூவரும் இவர்கள் இருவரும் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து அடியாட்களை அனுப்பி தூக்கி வரச் சொல்ல, அடியாட்கள் அவர்களை அழைத்து செல்வதைப் பார்த்த அணில் மற்றும் வாத்தியார் பெற்றோருக்கு தெரியப்படுத்த குண்டானும், சட்டியும் காப்பாற்றப்பட்டார்களா ? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா? என்பதே குண்டான் சட்டியின் கதை.

அதே கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சிறு சிறு விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறார் பி.கே.அகஸ்தி என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி இந்த சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கியிருப்பது அனைவரின் புருவத்தை உயர்த்திருக்கிறது.

Exit mobile version