“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடை நிதியாக குறிப்பிட்ட தொகையை தருவேன் என மன்னன் தலைமையிலான வேட்பாளர்கள் அறிமுக்க் கூட்டத்தில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் ரவீந்திரன் அறிவித்தார். இதுவரை நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்களில் போட்டியிட்ட எந்தத்தயாரிப்பாளரும் இப்படிக் கூறியதில்லை.
தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சந்திரபிரகாஷ் ஜெயின் அவர் கொடுத்த கடனை வசூலிக்கவே பொருளாளர் பதவியைப் பயன்படுத்தினார் என்கிற குற்றசாட்டு தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுப்பபடுகிறது. அவரது போட்டி வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தில் இதனை முன்னிலைபடுத்துகின்றனர்.
லிப்ரா ரவீந்திரன் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரபலமானவர். கொரோனா காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதாரரீதியாக உதவிகளை செய்துள்ளார். அது மட்டுமின்றி தன்னிடம் உதவி கேட்டுவரும் தயாரிப்பாளர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி செய்து வந்தவர்.
நாளை நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு கேட்பவர்களிடம், இதுவரை செய்த எந்த உதவியையும் கூறாமல் உங்களுக்காக உழைக்க எனக்கு ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள், வாக்களியுங்கள் எனக்கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவை அதிகரித்து வருகிறது. சந்திரபிரகாஷ் ஜெயின் மீதான எதிர்ப்பு, மன்னனுக்கான ஆதரவு அலை ஆகியன இவரை வெற்றி பெற வைக்கும் என்பதே தேர்தல்களநிலவரமாக உள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராக ஒரு மார்வாரி இருக்கும் நிலை மாறி உணர்வுள்ள ஒரு தமிழர் பொருளாளராக வேண்டும் என்பதும் இவருக்கான பலமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்”