நடிகர் விமல், சூரி நடிப்பில் தயாராகியுள்ள “படவா” என்கிற திரைப்படத்தை மதுரை சம்பவம் என்கிற படத்தின் இசையமைப்பாளர் தயாரித்துள்ளாராம். இவர் இந்தப் படத்தை ஆரம்பித்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆரம்பித்த காலத்திலேயே இவரிடம் படப்பிடிப்பு நடத்துவதற்கு பணம் இல்லாததால், திருச்சி பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரிடம் நெகடிவ் உரிமையை எழுதிக் கொடுத்து ஒன்றேகால் கோடி வாங்கியிருக்கிறார். பின்னர் அதே நெகடிவ் உரிமையை சென்னையில் உள்ள மார்வாடி ஒருவரிடம் எழுதிக் கொடுத்து 45 லட்சம் வாங்கியிருக்கிறார்.
பின்னர் படத்திற்கு இணைத் தயாரிப்பாளராக ஈரோட்டைச் சேர்ந்த நமச்சிவாயம் என்பவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக இதுவரை ஒன்றேகால் கோடி வாங்கியிருக்கிறார். இதுபோக கல்பாக்கம் சீனிவாசன், காரைக்குடி சீனிவாசன் ஆகிய இருவரிடமும் தலா 25 லட்சம் என ஐம்பது லட்சம் வாங்கியிருக்கிறார். மேலும் காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஜினி பாபுவிடம் 25 லட்சம், கார்த்திக் என்பவரிடம் 13 லட்சம், பண்ணீரிடம் 15 லட்சம், திருப்பதியிடம் 5 லட்சம், கே. ராஜனிடம் 2 லட்சம், சோழிங்கநல்லூர் காவல்நிலைய ஆய்வாளரிடம் 2 லட்சம் என ஐந்து கோடிக்கு மேல் கடன் வாங்கிக் குவித்துள்ளாராம்.
கடன் கொடுத்தவர்களுக்கு பணத்திற்கான வட்டியும் கொடுக்காமல் காலம் கடத்தி வருவதாகவும், தொந்தரவு செய்தால் காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி மிரட்டுவதாக கூறுகிறார்கள். முன்னாள் டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் மனைவி, தற்போதைய ஏ.டி.ஜி.பி மனைவி இருவரும் எனது இசையில் பாடல்கள் பாடுகின்றனர். காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் எனக்கு நெருக்கமானவர்கள் என காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளை ஏமாற்றி வருவதாக பேசிக்கொள்கிறார்கள்.
இது தவிர படத்தில் நடிக்க வைப்பதாக பல பேரிடம் வசூலித்திருக்கிறார். இன்னும் பணம் கொடுத்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, கேட்ட நமக்கே தலை சுற்றுகிறது.
தமிழ் திரையுலகில் படங்கள் தயாரிக்கவும், வெளியிடவும் எவ்வளவு சிரமம் என்பது அனைவரும் அறிந்ததே ! ஆனால் சொந்தமாக பணம் செலவு செய்யாமல் அடுத்தவர்களிடம் பணவசூல் செய்து தயாரிப்பாளர் ஆவது எப்படி என்பதை இவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
கடன் வாங்கிய பணத்திற்கு படம் விலைபோகுமா ? என கேட்டபோது.. படத்தைவெளியிட்டாலோ, விற்பனை செய்தாலோ தானே பணத்தை கொடுக்க வேண்டும். படத்திற்கான விலையை அதிகமாக கூறினால் யாரும் வரமாட்டார்கள் என்கிற எண்ணத்தில்தான் இருக்கிறார். கூடியவரையில் படம் வெளியாவதை தள்ளிப் போட்டுக்கொண்டே செல்வார் என்கிறார்கள்.