தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் அதிரடி காட்சிகள்.
சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், இவர்களுக்கு எதிர் கதாநாயகனாக நடிக்க மலையாள நடிகர் ஆர். நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ஒரு இராணுவ அதிகாரி மற்றும் IAS அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால்
பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.