ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்”. இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள, ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக்கோலமாக இவ்விழா நடைபெற்றது.
இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் புதுமுகங்களை, தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர். முதலாவதாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் – இயக்குனர் ராஜ் மோகனை மேடையில் அறிமுப்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பிரபலங்கள் படக்குழுவினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், பெரும் ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இணையத்தில் வெளியான குறுகிய நேரத்தில் டிரெய்லர், பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. பாடல்கள் அனைத்தும் இளைஞர்களின் விருப்பமாக ப்ளேலிஸ்டில் இடம் பிடித்து வருகிறது.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.