சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகின்றன. வீடியோ ஆல்பம் மூலம் சினிமாவில் நுழைந்து தங்களுக்கான இடத்தை அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்தவகையில் தற்போது லஹரி இசை நிறுவனம் சார்பில் ‘நீ போதும்’ என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது.
பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் நிரஞ்சனினா அசோகன் நாயகியாக நடித்துள்ளார். வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதியுள்ள இந்த பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில் ‘நீ போதும்’ ஆல்பத்தை நடிகை குஷ்பு,, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆன்லைனில் வெளியிட,, இந்த ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நடிகை மீனா, நடிகர்கள், ஷாம், பரத், இயக்குனர்கள் பரத், அரவிந்த் ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆல்பத்தை வெளியிட்டனர்.
இந்த நிகழ்வில் இந்த ஆல்பத்தின் இயக்குனர் வம்சி குருகுரி பேசும்போது, “எனக்கு தமிழ் மொழி அவ்வளவாக தெரியாததால் தடுமாற்றம் ஏற்பட்டபோது நிரஞ்சனி அசோகன் தான் ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தந்து உதவினார். இந்த பாடல் படப்பிடிப்பின்போது அழும் காட்சிகளுக்காக கிளிசரின் கொன்னு வர சொன்னார் நிரஞ்சனி. ஆனால் நான் கொண்டுபோக மறந்து விட்டேன். இருந்தாலும் கிளிசரின் இல்லாமலேயே நிஜமாகவே அழுது நடிக்கவேண்டும் என்று சொன்னேன். அவரும் அதை அருமையாக செய்து விட்டார்’ என்று கூறினார்..
நாயகி நிரஞ்சனி அசோகன் பேசும்போது, “இந்த கான்செப்ட் சொல்லும்போதே இதயத்தை தொட்டது. இந்த மொத்த புராஜெக்ட்டும் எனக்கு ஒரு மேஜிக் போல இருந்தது. பல பிரச்சனைகளை சந்தித்து அதையெல்லாம் கடந்து இன்று இந்த ஆல்பம் ரிலீசாகியுள்ளது. தன்னம்பிக்கை பெண்ணின் கதையாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை நடிகை மீனா வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரிடம் கேட்டோம். அவரும் உடனே ஒப்புக்கொண்டு இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
நடிகர் பரத் பேசும்போது, “யாக்கை திரி படத்தில் நடித்ததன் மூலம் நிரஞ்சனி அசோகன் எனக்கு அறிமுகமானார். ரொம்பவே துணிச்சலான பெண். இயற்கையான நடிப்பை வெளிபடுத்துபவர். தன்னம்பிக்கை கொண்ட பாடல் வரிகளுடன் கூடிய இந்த ஆல்பத்திற்கு அவர் பொருத்தமானவர் தான் “ என்று வாழ்த்தினார்.
நடிகை மீனா பேசும்போது, “இந்த பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. புதியவர்களின் வருகையை எப்போதும் ஊக்குவிக்க நான் தயங்கியதே இல்லை. அதில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம், திருப்தி கிடைக்கிறது. பல வருடங்களுக்கு முன்னால் நானும் சியான் விக்ரமும் காதலிசம் என்கிற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அந்த சூழலில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆல்பங்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது, மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்கிற வழிவகை தெரியாததால் அது ரிலீசாகமலேயே போய்விட்டது. ஆனால் இந்த ஜெனரேஷனில் ஆல்பம் பாடல் குறித்து எல்லோர்க்குமே தெரிந்துள்ளது. என்னால் செய்ய முடியாததை இன்னொருத்தர் செய்யும்போது அதை வெளியே தெரியப்படுத்த தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்” என்று கூறினார்.
நடிகர் ஷாம் பேசும்போது, “நல்ல படைப்பு வரணும்னா ஒரு நல்ல டீம் அமையனும். அந்தவகையில் ‘நீ போதும்’ ஆல்பத்திற்கு நல்ல டீம் அமைந்துவிட்டது. ஒவ்வொருத்தரின் வேலையும் தனித்தனியாக தெரிகிறது.. ஒரு ஆல்பம் பாடலுக்காக இவ்வளவு பெரிய டீமை அமெரிக்கா அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள் என்றால் பிரமிப்பாக இருக்கிறது. சுரேந்தர் ஜோ எனக்கு நல்ல நண்பர். என்னிடம் பல கதைகள் கூறியுள்ளார். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு பாடலாசிரியர் இருக்கிறார் என்பதை அவர் அப்போது வெளிப்படுத்தவே இல்லை.
‘நீ போதும்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பாடலை பார்க்கும்போது, என் வீட்டினர், குறிப்பாக என் மனைவி அடிக்கடி சொல்லும் நீ தேவையில்லை என்கிற வார்த்தை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த அளவுக்கு பெண்கள் இன்று தனியே நின்று சாதிப்பவர்களாக மாறிவிட்டார்கள். இந்த ஆல்பத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக்கினால் நீ தேவையில்லை என்கிற வார்த்தையையே டைட்டிலாக வையுங்கள்
இந்த ஆல்பத்தில் நடித்துள்ள நிரஞ்சனி அசோகன் தைரியமான பெண்ணாக இருக்கிறார். நடிப்பில் உடல்மொழி, ஸ்டைல், எமோஷன் என அனைத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இந்த விழாவுக்கு மீனா வருகிறார் என்றதுமே நானும் கலந்துகொள்ள வேண்டும் என முடிவுசெய்து விட்டேன். அவருடன் படங்களில் இணைந்து நக்டிகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் டான்ஸ் ஷோ ஒன்றுக்காக அவருடன் ஆறு மாதம் இணைந்து பயணித்திருக்கிறேன். அப்போது விளையாட்டாக நான் ஒரு விஷயம் சொல்ல, அதற்காக கோபப்பட்ட மீனா இதுபோல நடந்துகொள்ள கூடாது, புரபஷனலாக நடந்து கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்தார். இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்வதற்கு சரியான நபர் அவர் தான்” என்றார்.