குழந்தைகளுக்கான முதல் பான் இந்தியா படமாக உருவான “லில்லி”

கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ” லில்லி ” என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – சிவம்.

படம் பற்றி இயக்குனர் சிவம் பேசியதாவது… இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும். இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெரியவர்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதோடு நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறோம்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும். இத்தனை ஆண்டுகாலம் எனது சினிமா அனுபவத்தில் எத்தனையோ கதைகளை எழுதி வைத்திருக்கிறேன் ஆனால் என் முதல் படமாக இந்த குழந்தைகள் கதையைத்தான் எடுக்க வேண்டும், அவர்களது உணர்வுகளை அனைவருக்கும் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை எடுத்தேன். இந்தக் கதையை நான் உருவாக்க முக்கியக் காரணமே இயக்குனர் மணிரத்னம் தான். ஏன்னா அஞ்சலி படம் பார்த்து இன்றுவரை என்னால் அந்த படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. அந்த பாதிப்பில்தான் இந்த கதையை உருவாக்கினேன். நிச்சயம் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான படம்.

இதுவரை ஹாலிவுட் சினிமாவில் மட்டும் தான் டைனோசரை பார்த்து வந்தோம். முதல் முறையாக இந்த படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம், அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும் அதை நீங்கள் திரையில் பார்க்கும் போது கதையோடு ஒன்றியிருக்கும். படம் இம்மாதம் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் சிவம்.

Exit mobile version