உலக தரத்தில் சினிமா எடுப்பது எப்படி ? “கருத்துப் பட்டறை” சென்னை உலக சினிமா விழாவில்…

சென்னை உலக சினிமா விழாவின் அறிமுக நிகழ்ச்சியும், தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களின் திரையிடலும் வருகின்ற செப்டம்பர் 1, 2,& 3 வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள தேவி கருமாரி திரையரங்கத்தில் விழா நடைபெற இருக்கிறது. 700 இருக்கைகள், 4K தரத்தில் திரையிடல், டால்பி ஆமோஸ் ஒலி அமைப்பு ஆகிய நவீன உள்கட்டமைப்பு கொண்ட அட்டகாசமான திரையரங்கம் இது. ஐமேக்ஸ் திரையரங்க திரை போன்று மிகவும் அகலமான திரை அமைப்பு கொண்டது.
சமீபத்தில் தான் இத்திரை அரங்கம் நவீன கட்டமைப்புடன் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உலக சினிமா விழாவில் அறிமுக விழாவை துவக்கி வைத்து உரையாற்ற தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சென்னை உலக சினிமா விழா தேர்வு குழுவினர், தேர்வு செய்து அறிவித்த பன்னாட்டு உலக சினிமாக்கள், இந்திய உலக சினிமாக்கள்,
பன்னாட்டு மற்றும் இந்திய குறும்படங்கள் திரையிடப்படும். ஒவ்வொரு காட்சியிலும் முக்கியமான திரைப்பட ஆளுமைகள் கலந்து கொண்டு திரையிடப்பட்ட படைப்பின் பெருமைகளை எடுத்துக் கூறுவார்கள்.
திரையிடப்படும் படத்தின் குழுவினர்கள் கலந்து கொள்வார்கள். பார்வையாளர்கள் அவர்களோடு கலந்து உரையாடலாம்.

உலக சினிமா தரத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள், உலகிலேயே முதன்முறையாக சென்னை உலக சினிமா விழாவில் ‘வேர்ல்ட் பிரிமியர்’ என்ற அந்தஸ்தில் திரையிடப்பட இருக்கிறது. அதன் படைப்பாளிகள் உலக சினிமா தரத்தில் தமிழ் சினிமாவை உருவாக்குவது எப்படி என்கின்ற பயிற்சி பட்டறை நடத்துவார்கள். ஒவ்வொரு காட்சியிலும் திரைப்படத் துறையின் பல்வேறு ஆளுமை மிக்க தொழில்நுட்ப கலைஞர்கள் திரையிடப்பட்ட திரைப்படத்தில் உள்ள தொழில்நுட்ப பெருமைகளை விளக்கி கூறுவார்கள். இவ்விழா முக்கியமாக வருங்கால இயக்குனர் அனைவருக்கும் மிகப்பெரிய வரமாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ரூபாய் 12000 மட்டுமே செலவு செய்து உருவாக்கப்பட்ட ஒரு மலையாள உலக சினிமா இவ்விழாவில் திரையிடப்பட இருக்கிறது. அந்த திரைப்படம் கேரளா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு திரையிடல் கட்டணம் மட்டுமே ரூபாய் 2 லட்சம் ரூபாய் பெற்றது.
அது மட்டுமல்ல. கேரளாவில் பிரபலமாக இருக்கும் ஒரு இயக்குனர் அந்த திரைப்படத்தை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இன்று கேரளா முழுக்க அத்திரைப்படம் திரையிடப்பட்டு பெரும் வசூலை நிகழ்த்தியுள்ளது.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சென்னை உலக சினிமா விழாவில் கலந்துகொண்டு குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுத்து சாதிப்பது எப்படி என்கிற கருத்து பட்டறை நடத்த இருக்கிறார்கள். உலக சினிமா எடுக்க கோடிகள் தேவையில்லை. சிறந்த கற்பனை திறனும், திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்தால் இது சாத்தியம் என்பதை அத்திரைப்படத்தின் திரையிடல் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டு பெறுவதற்காக விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாகவும் சென்னை உலக சினிமா விழா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் அழைத்து வரலாம்.
(சிறுவர்களுக்கு அனுமதி இல்லை)

இந்நிகழ்ச்சியை காணவரும் அனைவருக்கும்
அனுமதி இலவசம். ( முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு அனுமதி அட்டை பெற்றுக் கொண்டு வர வேண்டும்)
இதற்கான விண்ணப்ப படிவத்தை கூகுள் ஃபார்ம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
திரையிடலில் இருக்கைகள், ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வழங்கப்படும். முதியவர்கள் அனைவரும் முதலில் அனுமதிக்கப்படுவார்கள். காட்சிக்காக அவர்கள் வரிசையில் காத்து நிற்க தேவையில்லை. இருக்கை வசதி அனைவருக்கும் வழங்கப்படும்.

Exit mobile version