கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அரவிந்த்ராஜ் இயக்கத்தில், சரத்குமார், அமிதாஷ், காஷ்மிரா பர்தேஷி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பரம்பொருள்”.
கதைப்படி… வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட தனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத வேதனையில் இருக்கிறார் ஆதி ( அமிதாஷ் ). இதேபோல் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றும் மைத்ரேயன் ( சரத்குமார் ) பதவியை பயன்படுத்தி எப்படியாவது பெரிய தொகையை சம்பாதித்து நிம்மதியாக வாழ நினைக்கிறார். இந்நிலையில் தங்கையை காப்பாற்ற பணம் தேவைப்படுவதால் வீடுகளில் திருடுகிறார் ஆதி. ஒருநாள் ஆய்வாளர் மைத்ரேயன் வீட்டில் திருடச் சென்றபோது மாட்டிக்கொள்கிறான்.
ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் அனைத்தையும் ஆதி மீது பதிவு செய்து சிறையில் தள்ள நினைக்கிறார் ஆய்வாளர் மைத்ரேயன். பின்னர் பிரபல சிலை கடத்தல்காரனுக்கும் ஆதிக்குமான உறவு தெரிந்ததும், ஆதியைப் பயன்படுத்தி சிலை கடத்தல் தொழில் செய்ய நினைக்கிறார் ஆய்வாளர் மைத்ரேயன். அதன்பிறகு ஆதியின் துணையோடு சிலைகளைக் கடத்தும் கும்பலில் ஒருவனை பிடித்து அவனிடம் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான ஒரு சிலையை கைப்பற்றுகிறார் ஆய்வாளர் மைத்ரேயன்.
பின்னர் தன்னிடம் இருக்கும் சிலையால் பலகோடி ரூபாய் வரப்போகிறது என்கிற சந்தோஷத்தில் விற்பனை செய்ய ஆட்களைத் தேடி ஆதியோடு அழைக்கிறார் ஆய்வாளர் மைத்ரேயன். இவர்களிடம் இருக்கும் சிலையை விற்பனை செய்தார்களா ? ஆதிக்கு பணம் கிடைத்ததா ? ஆதியின் தங்கை காப்பாற்றப்பட்டாரா ? என்பது மீதிக்கதை….
சிலை கடத்தல் தொழிலில் நடைபெறும் சம்பவங்களை தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். தமிழர்களின் பண்டைய காலத்தின் பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கூறுவதோடு, சிலைகளைக் கடத்தும் கும்பல் செய்யும் அனைத்து விஷயங்களையும் அற்புதமான திரைக்கதையின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .
படம் முழுவதும் பணத்திற்காக எதையும் செய்ய நினைக்கும் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சரத்குமார். அவரோடு பயணிக்கும் அமிதாஷும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயல்பான நடிப்பு பாராட்டுக்குரியது. மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.