பாடலாசிரியர் பிறைசூடன் எழுதிய நாராயணியம் என்னும் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கலைமாமணி பிறைசூடன் எழுதிய நாராயணியம் என்னும் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை தியாகராயநகரில் உள்ள வாணிமகாலில் நடைபெற்றது. ‘கொரோனா’ வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்த வாணி மகாலில் நடைபெற்ற முதல்விழா இந்த நாராயணியம் (ஆன்மிக) நூல் வெளியீட்டு விழா. சமீபகாலமாக இந்திய அரசியலில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் ஆன்மிகம் என்னும் பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுவதால் இந்த விழாவில் மிகுந்த எதிர்பார்ப்போடு ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் K.T.ராகவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு லோகாயுக்தா உறுப்பினர் Dr.M.ராஜாராம் ஐஏஎஸ்., பிரபல ஜோதிடர் செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக கவிஞர் பிறைசூடன் ஏற்புரையாற்றி பேசும் போது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகபட்டினத்தில் ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது அங்கு ஒரு அபிராமி அந்தாதி நூலை வழங்கினார்கள். அந்த நூலில் உள்ள பாடலை அழுதுஅழுது, உருகிஉருகி பாடியதால் நான் ஒரு கவிஞன் ஆனேன். சென்னை தியாகராய நகரில் உள்ள பசுல்லா சாலையில் உள்ள ஒரு வீட்டில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த காலத்தில் நான் அன்னாந்து பார்த்த அதிகாரிதான் இன்று சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ராஜாராம் ஐ.ஏ.எஸ். எனக்கு முதன்முதலில் தமிழக அரசால் கபிலர் விருது அறிவிக்கப்பட்ட போது பரிந்துரை குழுவில் ராஜாராம் ஐஏஎஸ் இருந்தார் என்பது எனக்கு அப்போது தெரியாது. அதற்காக இப்போது நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அடக்கத்துடன் தனக்கே உரிய பாணியில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். கபிலர் விருது வழங்கிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி பொட்டுத் தங்கம் அணியா கட்டித் தங்கம் அம்மா என்று சொன்னேன். அது முதல்வரின் கவனத்திற்கு சென்ற போது இப்போது நான் மூக்குத்தி அணிந்திருக்கிறேனே. இப்போது என்ன சொல்வீர்கள் என்றார். பொட்டுத் தங்கம் அணிந்த கட்டித்தங்கம் அம்மா என்றேன். கலைஞர்களுக்கு பேச சொல்லித்தர வேண்டுமா என்று அம்மா சிரித்தார்கள் என்று ஜெயலலிதாவிற்கும் அவருக்குமான பழைய நினைவுகளை கூறும்போது அரங்கமே கலகலப்பானது.

பள்ளிப்படிப்பினால் நான் பெறாத விருதுகளை எனது பாடல் வரிகளால் ஐந்து முறை அரசு விருதுகளை பெற்றிருக்கிறேன். கலைஉலகில் ஏராளமான பட்டங்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் எனது மனைவி எனக்கு வழங்கி பட்டம் இழிச்சவாயன் என்ற பட்டம். சினிமாவில் நேர்மையாக வாழ்ந்தால் ஒதுக்கிவிடுகிறார்கள். பணம் இல்லாவிட்டால் யாரும் மதிப்பதில்லை. ஒரு நிகழ்ச்சியில் பேசினால் ஐம்பதாயிரம் ஒருலட்சம் சம்பளம் வாங்கும் பேச்சாளரான என்னை எனது வீட்டில் ஏன் வளவளனு பேசுகிறீர்கள் பேச்சைக் குறைங்க என்கிறார்கள். அதுதான் வாழ்க்கை என்று தனது வறுமைக்காலங்களை நினைவு கூர்ந்தார். இருக்கும் காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இந்த உலகத்தில் என்னை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லவே நாராயணபட்டாத்திரி எழுதிய நாராயணியத்தை நான் வாங்கினால் என் கர்மா விலகும் என்கிற எண்ணத்தில்தான் சமஸ்கிருதத்தில் இருக்கும் நாராயணியத்தை தமிழில் எழுதினேன். கவிஞர் கண்ணதாசன் பிறப்பால் வணிகர். ஒரு வணிகர் கவிஞர்  ஆனார். அதனால் தமிழ் வாழ்ந்தது. ஆனால் தற்போது கவிஞர்களெல்லாம் வணிகர்கள் ஆனார்கள். தமிழ் வீழ்ந்தது என்று தற்போதைய நிலையையும் எடுத்துரைத்தார்.

சினிமாவை நிறையப்பேர் நேசிப்பார்கள். சினிமாவில் சிகரத்தில் நின்றால் மாலை சூடுவார்கள். சிதறி நின்றால் அவதூறாக பேசி வாழ்க்கையை முடித்து மாலை போடுவார்கள். இதுதான் சினிமா வாழ்க்கை. வாழ்க்கையில் எது நடந்தாலும் மனநிறைவோடு ஏற்றுக்கொண்டு அமைதியாக இருப்பதே இன்றைய ஆன்மிகம். பெரியவர்களை மதித்து அவர்களிடத்திலே உள்ள அதிகாரத்தையும், அலங்காரத்தையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு திறமை அவர்களிடத்திலே இருக்கும். அந்த அங்கீகாரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் வெற்றியையும், வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்கிற பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். இறை நம்பிக்கையோடு நல்ல கவிஞராக வேண்டும் என்ற அங்கீகாரத்திற்காகத்தான் இந்த நூலை எழுதினேனே தவிர பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் இந்த புத்தகத்தை எழுதவில்லை. கடந்த நாற்பது ஆண்டுகளாக சினிமாவில் எவ்வளவோ பெயரையும் புகழையும் சம்பாதித்திருந்தாலும் கர்வமில்லாமல் இன்றும் தனது அங்கீகாரத்திற்கு போராடும் ஒரு உண்மையான எழுத்தார் கவிஞர் பிறைசூடனின் இந்த மேடைப் பேச்சு வளரும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உந்து சக்தியாக அமைந்திருந்தது.

இந்த விழாவில் கூல்பதிப்பகம் வெளியிட்டுள்ள நாராயணியம் நூலை கே.டி.ராகவன் வெளியிட ராஜாராம் ஐஏஎஸ் பெற்றுக்கொண்டார். ஏராளமான ஆன்மிகவாதிகள், இலக்கியவாதிகள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சூரியன்

Exit mobile version