நகைச்சுவை நாயகன் சதீஷ் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள “வித்தைக்காரன்” படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகானாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து இப்பாடலை வெளியிட்டுள்ளனர். கேட்டவுடன் பிடிக்கும் வகையில், அனைவரும் முணுமுணுக்கும் அட்டகாச மெலடியாக அமைந்துள்ள இப்பாடல், ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடி திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி.
காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகானாக நடித்துள்ளார். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.