விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
ஒளிப்பதிவாளர் கதிரவன் பேசுகையில், இன்று தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது. உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் பெரிய சவால் என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதை சரியாக இந்தப் படத்தில் கையாண்டுள்ளேன். என்னுடைய பார்வையில் எல்லா கலைஞர்களையும் வேறு விதமாக காட்ட முயற்சித்துள்ளேன் என்றார்.
நடிகர் செளந்தரராஜன், நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையாவிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. ‘குட்டி புலி’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் கார்த்தி சிறப்பாக செய்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். எல்லோருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் வேலு பிரபாகரன், இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக், விக்ரம் பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அப்படியானவரின் மகனுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதனத்தை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இயக்குநர் கார்த்தி, இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்தையாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது என்றார்.
இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா பேசுகையில், ‘கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் ‘டாணாக்காரன்’ நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபுவிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. ‘ரெய்டு’ படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
நடிகை ஸ்ரீதிவ்யா பேசுகையில், ‘ரெய்டு’ படம் நான் முத்தையாவுக்காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்” என்றார்.