“சில நொடிகளில்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது, பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, ‘கருப்பு பேரழகா’, ‘ஆட்டக்காரா’ என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராக ஆவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை ‘சில நொடிகளில்’ படம் நிறைவேற்றியுள்ளது. அந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கு நன்றி. கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு மட்டும்தான் காதல் இருக்கிறது. அந்த எமோஷன் வேண்டும் என்று வினய் சொன்னார். இரண்டு பாடல்கள் செய்து கொடுத்தேன். அதில் தொடுவானம் தேர்ந்தெடுத்தார் என்றார்.

நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில், நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ அப்படி தான் இந்தப் படத்திலும் மாடலாக நடித்திருக்கிறேன். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்துதான் என் பயணம் ஆரம்பித்தது. நான் மிகப்பெரிய த்ரில்லர் ஃபேன். அதனால், இந்தப் படமும் பிடித்து நடித்தேன். நான் தல அஜித்தின் மிகப்பெரிய ஃபேன். ரிச்சார்ட்டிடம் பேசும்போது அஜித்துக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் என்று நினைத்து சந்தோஷப்படுவேன். பாடல்களும் இசையும் எனக்குப் பிடித்துள்ளது என்றார்.

படத்தின் தயாரிப்பாளர், நடிகை ‘புன்னகை பூ’ கீதா பேசியதாவது, “‘சில நொடிகளில்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் கொடுக்கப் போகும் ஆதரவுக்கும் நன்றி. படம் ஒரு அழகான ஜர்னி. டீமும் அந்த அனுபவத்தைக் கொடுத்தது. வினய் ரொம்பவும் பொறுமையான நபர். ரிச்சர்ட் ப்ளஸன்ட்டானவர். யாஷிகா அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு காட்சியில் பெட்டிக்குள் அவர் மடங்கி உட்கார வேண்டும். அவர் காலில் ஏற்கனவே பிளேட் உள்ளது. அப்படி உட்காருவது மிகவும் கஷ்டம். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாது அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தார். படத்தில் எனக்கு இருந்த சவால் ‘பட்டாசு பூவே’. அந்த பாடலுக்காக வரவேண்டிய சல்சா டான்ஸருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்காமல் போனது. அதனால் எங்களுக்கு லோக்கலில் கிடைத்தவரை உடனடியாக வரவைத்து ஒன்பது மணி நேரத்தில் ரிகர்சல் செய்து அந்தப் பாடலை எடுத்தோம். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் நன்றாக எடுத்து இருக்கலாமோ என்ற ஆதங்கம் இருக்கிறது. அந்த பாடல் சமயத்தில்தான் லண்டனில் எனக்கு கோவிட் வந்தது. அதன் பிறகு தான் தெரிந்தது செட்டில் நிறைய பேருக்கு தெரியாமலே கோவிட் இருந்தது என்று. இதுபோன்று சில சவால்களும் படத்தில் எனக்கு இருந்தது என்றார்.

தயாரிப்பாளர் ஜெயக்குமார், இந்தப் படம் முழுக்க லண்டனில் படமாக்கினோம். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். நிறைவான ஒன்றாக இருந்தது. இயக்குநர் வினய் எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்வேன். கெளதம் மேனனையும் நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். ரிச்சார்டும் சிறப்பாக நடித்துள்ளார். கீதாவுக்கு சினிமா மீது நேசமும் அர்ப்பணிப்பும் அதிகம். யாஷிகாவும் நன்றாக நடித்துள்ளார். இசையும் இந்தப் படத்தில் சிறப்பாக வந்துள்ளது என்றார்.

‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி. பேசியதாவது, என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் ‘திரெளபதி’. அவர் இல்லை என்றால் ‘திரெளபதி’ இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான ‘ருத்ரதாண்டவ’மும் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வாவுடன் ‘பரகாசுரன்’ செய்தேன். நானும் ரிச்சரட்டும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், ‘என்ன ரிச்சர்ட்டுக்கு கல்யாணமா?’ என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் எனப் புரிந்தது. ரிச்சார்ட்டை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் வினய் பரத்வாஜ், நான் இந்தியாவை விட்டு சென்று 18 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் செட்டில்ட். நல்ல பேங்க்கிங் வேலை இருந்தது. எனக்குப் பிரியமான ஒருவரை கேன்சரால் இழந்து விட்டேன். அதனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யூடியூப்பில் வீடியோக்கள் போட ஆரம்பித்தேன். சென்னையிலும் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. சிங்கப்பூரில் ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழுக்காக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. எனக்குள் இருந்த இயக்குநரை அப்போதுதான் உணர்ந்தேன். மீடியா குளோபல் ஒன் நிறுவனம் கோவிட் சமயத்தில் எனக்கு கால் செய்து லண்டனில் செய்வது போன்ற ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். த்ரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாமே இதில் உண்டு. இசை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். தர்ஷாவின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அவர் மிகவும் திறமையானவர். வித்தியாசமான யாஷிகாவை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். கீதா மலேசியாவில் பாப்புலரான ஆர்.ஜே. சிறந்த தயாரிப்பாளர் என்றாலும், அவரை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். படத்தில் வித்தியாசமான கீதாவைப் பார்ப்பீர்கள். படத்தை எடுப்பதை விட அதற்கு நல்ல புரோமோஷன் செய்து டிஸ்டிரிபியூட் செய்வதுதான் பெரிய விஷயம். அது இந்தப் படத்திற்கு சிறப்பாகவே நடந்துள்ளது. மோகன் ஜி படங்களுக்கு நான் பெரிய ரசிகன். செலிபிரிட்டி நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இதற்கு முன்பு பல பிரபலங்களை சந்தித்து இருக்கிறேன். அதில் இருந்து சொல்கிறேன். ரிச்சார்ட் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். சிறந்த மனிதர். அவரை இந்தப் படத்தில் வித்தியாசமான நடிகராகப் பார்ப்பீர்கள். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது என்றார்.

நடிகர் ரிச்சார்ட் ரிஷி, படத்தில் ஐந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்களைச் செய்திருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக தியேட்டரில் இந்தப் படத்தைப் பாருங்கள். சின்னப் படங்கள் எல்லாம் நிறைய ஜெயித்திருக்கிறது. பெரிய படங்கள் எல்லாம் நிறைய தோற்றிருக்கிறது. அதனால், படங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.

Exit mobile version