தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ எனும் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராக ஜீ. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது பாடகர் -இசையமைப்பாளர்- நடிகர்- தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுள்ள ஜீ. வி. பிரகாஷ்குமார், பாடகர்- பாடலாசிரியர்- நடிகர்- இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், நடிகரும், தொகுப்பாளருமான அபிஷேக் ராஜா, நடிகர் ஷ்யாம் குமார், தயாரிப்பாளர்கள் சி.வி. குமார், தனஞ்ஜெயன், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் ஸ்டார்டா பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடரான ஜீ. வி. பிரகாஷ்குமார் பேசுகையில், நரேஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துகள். நான் சிறிய வயதிலிருந்தே திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். நிறைய புது இளம் திறமையாளர்களுடன் பணிபுரிந்து வந்திருக்கிறேன். வெற்றிமாறன், அட்லீ, ஏ. எல். விஜய், என பல புது இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் இதுவரை இருபத்திமூன்று படங்களில் நடித்திருக்கிறேன். இதில் பதினேழு படங்கள் புது இயக்குநர்கள் தான் இயக்கியிருக்கிறார்கள். நிறைய புதுமுக நடிகைகள், நிறைய புதுமுக பின்னணி பாடகர்கள், பாடகிகளுடன் பணியாற்றியிருக்கிறேன்.
குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள்… போன்றவற்றிற்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒத்துழைப்பதில்லை. ஆனால் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ‘ஸ்டார்டா’பிளாட்ஃபார்மை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதற்கும் மகிழ்கிறேன்.
பொதுவாக சினிமாவில் வாய்ப்பு தேடுவது எப்படி? என தெரியாது. மேனேஜரைப் பார்க்கவேண்டுமா..? இயக்குநர்களை பார்க்கவேண்டுமா..? அல்லது அவர்களது உதவியாளர்களை பார்க்கவேண்டுமா..? அலுவலத்திற்கு நேரடியாக செல்லவேண்டுமா ? அது எங்கேயிருக்கிறது. இப்படி நிறைய விசயங்கள் இன்றைய தேதி வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. பாடல் எழுதும் பாடலாசிரியராகட்டும். பாடும் பாடகர்களாகட்டும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம்..எங்கு பார்க்கவேண்டும்? யாரை பார்க்கவேண்டும்? என்று கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பதிலாக இந்த பிளாட்ஃபார்ம் இருக்கிறது. இதை பெரிதும் வரவேற்கிறேன். ஏனெனில் இந்த பிளாட்ஃபார்மில் திறமைசாலிகள் கண்டறியப்பட்டு… அவர்களின் வீடியோவும் இடம்பெற்றிருக்கிறது. இது பெரிய பெரிய திரைப்பட நிறுவனங்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் போன்றவர்களுக்கு தங்களுக்கு தேவையான திறமையான கலைஞர்களை தேர்வு செய்ய பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும் பிளாட்ஃபாரமாக இந்த ‘ஸ்டார்டா’ இருக்கும் என எதிர்பாக்கிறேன். நிறைய பேருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த பிளாட்ஃபார்மில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். அதனால் இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிளாட்ஃபார்மின் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்புகிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்த பிளாட்ஃபார்மில் உள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்த பிளாட்ஃபார்ம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என உறுதியாக நம்புகிறேன். இங்கு வருகைத்தந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இதனைத் தொடர்ந்து ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் தயாரிப்பில் அபிஷேக் ராஜா இயக்கத்தில் உருவான விளம்பர படங்கள் திரையிடப்பட்டன. இவையனைத்தும் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருந்தது.
இதன் பிறகு நடிகர் ஷ்யாம் குமார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ் ஆகியோர் கலந்துகொண்ட குழு விவாதமும் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அவர்கள் திரைத்துறையில் நுழைவதற்காக எதிர்கொண்ட சவால்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட போது.. அது திரைத்துறையில் அறிமுகமாகி சாதிக்கவேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.