தே.மு.தி.க கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய விஜயகாந்த், அவர் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதன்தொடர்ச்சியாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டார்.
அதில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சித் தலைவரானார். அதன்பின்னர், முதலமைச்சர் ஜெயலலிதாவுடனேயே அவருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதன்பின்னர், அவரது கட்சியிலிருந்து பலரும் விலகத் தொடங்கினர். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். அதில், தே.மு.தி.க உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் படுதோல்வியடைந்தனர். அதன்பிறகு விஜயகாந்த்தும் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலைக்குச் சென்றார்.
அதன்பின்னர், தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது அவர் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டு வருகின்றன. அது தே.மு.தி.கவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், மார்ச் 19 நேற்று பிரேமலதா விஜயகாந்த்துக்கு பிறந்தநாள்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை விஜயகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரனும், சண்முகப்பாண்டியனும் உடன் உள்ளனர். அந்தப் புகைப்படத்தை பார்த்ததும் பலரும் பிரேம லதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.