தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
விஷ்வா லக்ஷ்மி திரையரங்கு, 350 இருக்கைகள் கொண்டது. 7.1 டால்பி அட்மாஸ் தொழில் நுட்பத்தில், அதி நவீன வசதிகள் கொண்டது. திருவாரூர் மாவட்ட சினிமா ரசிகர்களுக்குச் சிறப்பான திரை அனுபவம் தரும் வகையில் இந்த திரையரங்கு உருவாகியுள்ளது.
இத்திரையரங்கத்தைத் துவக்கி வைத்த, பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் தயாரிப்பாளர் தாய் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு எனத் தரமான படைப்புகளைத் தயாரித்து தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் தாய் சரவணன் தற்போது நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் திரைக்குவரவிருக்கும் “வள்ளி மயில்” படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.