கே.ஜே.பி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் கே.ஜே. பாலமணிமார்பன், சுரேஷ்குமார், கோகுல் பினாய் ஆகியோர் தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், சோஃபியா, சாண்டி, அம்மு அபிராமி, சுபாஷ், ஜனனி, ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ஹாட் ஸ்பாட்”.
கதைப்படி… திருமண சம்பரதாயங்களில் காலங்காலமாக கடைபிடித்து வரும் சடங்குகளை கடைப்பிடிக்காமல், சற்று வித்தியாசமாக பெண் ஆணுக்கு தாலி கட்டி, பெண் வீட்டிற்கு அழைத்துச்சென்று வாழ்வதும், வீட்டிற்கு வாழ வந்த ஆண், அலுவலகத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை செய்வதும், அந்த வீட்டில் அவரது மாமனாரும் கழுத்தில் தாலியோடு, மருமகனை வேலைகள் வாங்குவதும் என கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
பின்னர் காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக, இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என முடிவுசெய்து, முதலில் பெண் தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கியவுடன், ஆணின் பெற்றோரிடம் இருவரும் பேசுகின்றனர். அப்போது இருவருக்குமான முரண்பாடான உறவுமுறை தெரியவருகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என இன்னொரு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பையனும், பெண் பத்திரிகையாளரும் காதலிக்கின்றனர். பையனுக்கு வேலை பறிபோனதும், குடும்ப சூழ்நிலை காரணமாக ஆண் விபச்சாரனாக மாறி, வசதி படைத்த பெண்களிடம் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்து பணம் சம்பாதிக்கிறான். இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்ததும் என்ன நடக்கிறது என மூன்றாவது கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
மேலும் ஏழ்மையான ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தில், தனது ஆறு வயது பெண் குழந்தையும், நான்கு வயது பையனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகி, அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிறார்கள். அதன்பிறகு அந்த குடும்பமும் வசதியாகிறது. இந்நிலையில் அந்தப்பெண் திடீரென இறந்துவிட, அவள் இறப்பிற்கு அவரது மனைவிதான் காரணம் என்கிறார் ஆட்டோ ஓட்டுநர். அதற்கான காரணம் என்ன என நான்காவது கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
மேற்கண்ட குதர்க்கமான நான்கு கதைகளையும், நேர்த்தியான வசனங்கள் மூலம் நிகழ்கால சம்பவங்களையும், மக்களுக்கு நினைவூட்டும் வகையில் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.