பைன்ஜான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பைன்ஜான் தயாரித்துள்ள “இங்கு மிருகங்கள் வாழும் இடம்” படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பைன்ஜான், சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. அன்புச் செல்வன், திரைப்பட விநியோகஸ்தர் “ஆக்ஷன் ரியாக்ஷன்” ஜெனிஷ், சண்டை பயிற்சியாளர் “இடிமின்னல்” இளங்கோ மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பைன்ஜான் பேசுகையில்.. திரைப்பட தணிக்கை குழுவினர் இந்தப் படத்திற்கு “A” சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் என்னை ஏமாற்றி விட்டனர். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், மிகவும் சிரமப்பட்டு இந்தப் படத்தை வெளியிட வந்திருக்கிறேன். நல்ல கதையம்சம் கொண்ட இந்தப் படம் வெகுஜன மக்களை சென்றடைய அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்புச் செல்வன் பேசுகையில்.. ஒரு திரைப்படம் தயாரிப்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன். இன்று தமிழ் சினிமாத் துறையில் பிரமாண்டமான தயாரிப்பு நிறுவனமாக திகழும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனே ஒரு காலத்தில் சிரமப்பட்டவர்தான். அவர் நினைத்தால் இன்று தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உழைப்பால் உயர்ந்தவர் கலாநிதி மாறன்.
அதேபோல் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பைன்ஜானும் உழைப்பால் உயர்ந்தவர். சினிமா மீதுள்ள காதலால், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் “இங்கு மிருகங்கள் வாழும் இடம்” படத்தின் தயாரிப்பு பணிகளைத் தொடங்கியதிலிருந்தே பல நபர்களால் ஏமாற்றப்பட்டாலும், இந்தப் படத்தை வெளியிட்டு வெற்றி பெறுவேன் என்று உறுதியாக இருக்கிறார். இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.
சண்டைப் பயிற்சியாளர் “இடி மின்னல்” இளங்கோ பேசுகையில்.. படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான பைன்ஜான், சண்டை காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார். ஒரு காட்சியில் நடிக்கும்போது குப்பை மேட்டில் உருண்டு புரண்டு கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்தார். பின்னர் அவர் ஒரு வாரத்திற்கு மேல் சாப்பிடாமல் இருந்தார். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.
இந்தப் படத்தை ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வெளியிடுகிறார்.