இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா எஸ் தயாரிப்பில், எஸ். பாண்டி இயக்கத்தில், சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், டேனி போப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராபர்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் “ராபர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, தயாரிப்பாளர் கவிதா எஸ், இயக்குனர் எஸ். பாண்டி, நாயகன் சத்யா, இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள “மெட்ரோ” படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் பேசுகையில்.. பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தலைநகரான சென்னைக்கு வேலை தேடி வருகின்றனர். அவ்வாறு வேலை தேடி வந்த ஒரு இளைஞன், சென்னை மக்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து தானும் இதுபோன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறான். தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருப்பதால், அவன் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அவனது பேராசையால் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகிறான். அவன் தேர்ந்தெடுத்த பாதை அவனுடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே “ராபர்” படத்தின் கதை என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தயாரிப்பாளர் கவிதா எஸ் பத்திரிகையாளராக சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் உருவாக்கிய “எண்ணம் போல் வாழ்க்கை” இசை ஆல்பத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விருந்தினராக மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.