ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ்.என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் இளன் பேசுகையில், ‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும். ஒரு கார் வாங்க வேண்டும். கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும். என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே, அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன் அந்த கனவை விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமான மனதுடன், அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா ! அதைத்தான் இந்த படம் பேசுகிறது. 1980 களில் ஒரு பையன் அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். எண்பது 90 ஆகிறது. 2000 ஆகிறது. 2010யும் கடக்கிறது. கடந்து போகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயணம் தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.
தயாரிப்பாளர் சாகரிடம் இந்த கதையை சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலை சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என பதிலளித்தார். அந்தத் தருணத்தில் அவர் எடுத்த விரைவான முடிவு தான் இன்று வரை எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அவர் எடுக்கும் வேகமான முடிவு இப்படத்தை நேர்த்தியாக உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது. அவர் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக பொறுப் பேற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் தங்களது பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து ஒத்துழைப்பு வழங்கினர். அனைவரும் தங்களின் மனமார்ந்த பங்களிப்பை இப்படத்திற்காக அளித்துள்ளனர். இதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாக தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு, ஒரு அம்மாவின் அன்பு, ஒரு நண்பனின் அன்பு, ஒரு மனைவியின் அன்பு, ஒரு காதலியின் அன்பு, என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கிறது. அதை படம் பார்த்த ரசிகர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். என்றார்.
தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், இயக்குநர் இளன், ‘ஸ்டார்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது காணொளி மூலமாக ஒரு கதையை என்னிடம் சொல்லி இருக்கிறார். அவர் கதை சொல்லும் விதம் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் பாணி இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. இது தொடர்பாக எஸ்கியுடிவ் ப்ரொடியூசர் வினோத்திடம் இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனச் சொன்னேன். சிறிது நாள் கழித்து என்னை சந்தித்து ஸ்டார் திரைப்படத்தை உருவாக்கலாமா? என கேட்டார். அவர் இந்த படத்தின் கதையை முழுவதுமாக விவரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் ஹீரோ? என கேட்டேன். அவர் கவின் என்று சொன்னார். அப்போது ‘டாடா’ படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த தருணம். ‘டாடா’ படத்தை பார்க்கும் போதே தமிழ் திரையுலகத்திற்கு நம்பிக்கையான ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தேன். இளனும் கவின்தான் நாயகன் என்று சொன்னவுடன் நான் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.
அவர் சொன்னது போல் எனக்கு இரண்டு நாள் தான் டைம் கொடுத்தார். அவருக்கு வேறு திசைகளில் இருந்து அழுத்தம் இருந்ததை உணர முடிந்தது. அப்போது இந்த படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இளன்+ கவின் காம்பினேஷன் மீதும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதையை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார். எல்லா பிரிவினரும் அன்பாக ஒன்றிணைந்து உருவாக்கிய படைப்பு இந்த ஸ்டார். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை அதிதி பொஹங்கர் பேசுகையில்.. இயக்குநர் இளன் திறமையானவர். வசனத்தையும், வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும், அதனுடன் உணர்வுபூர்வமாக எப்படி நடிக்க வேண்டியதையும் தெளிவாக குறிப்பிடுவார். இந்தப் படத்தில் சுரபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மேடை நாடகத்திலிருந்து வந்திருக்கிறேன். ஒத்திகை முக்கியம் என்பதை நன்கறிவேன். படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் பழகிய தருணங்கள் மறக்க இயலாதவை. படக்குழுவினர் அனைவரும் நட்புடன் பழகினர். கவின் ஒரு சக நடிகராக இருந்தாலும், மிகத்திறமையானவர். மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். நான் நடித்த முதல் திரைப்படம் வெளியாகிறது. ஓராண்டிற்கு முன் யாராவது என்னை சந்தித்து, நீங்கள் தரமான படத்தில் முதன்மையான வேடத்தில் நடிப்பீர்கள் என்று சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக என்னுடைய பெற்றோருக்கும், வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தின் நடித்தவுடன் எனக்கு ஓரளவு மன திருப்தி ஏற்பட்டிருக்கிறது. நான் இயக்குநர் இளனின் வழிகாட்டுதலின்படி தான் நடிகை ஆகியிருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு கவினுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும். அவர் பெரிய ஸ்டாராகி விடுவார் .படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போதெல்லாம் படக்குழுவினரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி என்னை வியப்படையச் செய்தது. இதனால்தான் படங்களை உணர்வு பூர்வமாக உருவாக்க முடிகிறதோ ! என்றும் எண்ணி இருக்கிறேன். இந்தப் படத்திலும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றனர். அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.
நடிகர் கவின் பேசுகையில், டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப், ஒன்லைன் ஆர்டர், ஸ்கிரிப்ட் புக் என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக, விரிவாக கதையை சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, என்னை தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை, என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன். படத்தின் இணை தயாரிப்பாளர் தீபக் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால் படப்பிடிப்பு பணிகளை நேர்த்தியாக அங்கிருந்தே ஒருங்கிணைத்து விடுவார்.
இந்தப் படத்தின் கதையை கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது. அதற்கான உழைப்பும் நேரமும் அதிகம். அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்து பணியாற்றியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ஷத்ரியன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால் மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.
பொதுவாக ஆறுதலுக்காக சொல்வார்கள் அல்லவா,இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிட பெரிதாக நடக்கும் என்று, அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன். யுவன் சங்கர் ராஜா இசை என்றவுடன் என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறிவிட்டது. இந்த படத்திற்காகவே யுவன் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அதை நீங்கள் முன்னோட்டத்திலேயே பார்த்து ரசித்திருக்கலாம். படம் பார்க்கும்போதும் அவருடைய உழைப்பு உங்களுக்கு தெரிய வரும் என நினைக்கிறேன். எழில் அரசு தான் ஒளிப்பதிவு என்றவுடன், எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. ஏனென்றால் ‘டாடா’ படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர்.
இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது என பொதுவாக சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது. ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது என தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
இந்தப் படத்திற்கும் அது நடந்தது. தயாரிப்பாளர் சாகரிடம் கதை செல்வதற்கு முன் சிலர் இந்த விசயத்தை சொன்னார்கள். அதுவரைக்கும் நான் மிகவும் நம்பிக்கையாக தான் இருந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகரும் கதையைக் கேட்டு விட்டு இது போன்ற கருத்தை சொல்லி விடுவாரோ ! என பயந்தேன். ஆனால் இந்த படத்தை தயாரிக்க ஒரே நாளில் அவர் ஒத்துக்கொண்டவுடன் எனக்கு இருந்த பயம் விலகி, நம்பிக்கை அதிகரித்து விட்டது. கலையை கலையாக பார்க்கிற, அதை மிகவும் நேசிக்கிற பட குழு மீது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இந்த படத்தை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து இந்த படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றியை தரும் என நம்புகிறேன்.
இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி, சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன் என்றார்.