ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏப்ரல் ஏழாம் தேதியன்று அறிவித்தனர்.
இது போன்ற அறிவிப்பு சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பே ரஜனிகாந்த் நடிக்கும் படங்களுக்கு அறிவிக்கப்படுவது இல்லை. ஆனால் வேட்டையன் படத்திற்கு வெளியானதற்குப் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறதாம்.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்கவேண்டும் என்று ரஜினி கட்டளையிட்டிருக்கிறாராம். ஏற்கெனவே, படக்குழுவினருக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது தொடர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதற்குக் காரணம், படப்பிடிப்புத் தளத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட பல விசயங்களில் ஏற்கெனவே சொன்னபடி இல்லாமல் அதிக வசதிகளைக் கேட்டதாம் இயக்குநர் தரப்பு. அது ஏற்கனவே திட்டமிட்டதைவிடப் பலமடங்கு செலவு பிடிக்கும் என்பதால் அவற்றை ஏற்க முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் மறுத்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்பும் ஓர் உடன்பாட்டுக்கு வந்து படப்பிடிப்பு தொடங்கியது என்றார்கள்.
இப்போது ரஜினி படப்பிடிப்பை வேகமாக முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால், இன்னும் எவ்வளவு நாள் படப்பிடிப்பு என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.அதன்படி, இன்னும் அறுபது நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று படக்குழு சொன்னதாம். இதைக் கேட்டு ரஜினிகாந்த் மற்றும் லைகா நிறுவனம் ஆகிய இருவருமே அதிர்ச்சி அடைந்தார்களாம். இதுவரை சுமார் எண்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இன்னும் அறுபது நாட்கள் என்றால் மொத்தம் நூற்றிநாற்பது நாட்கள் ஆகும்.
படம் தொடங்கும்போது சுமார் நூறு நாட்களில் மொத்தப்படமும் முடிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் படிப்படியாக நாட்கள் அதிகரித்துள்ளன.இதனால் முதலில் தயாரிப்பு நிறுவனம் கோபமானது. அதன்பின் படப்பிடிப்பு நாட்களை அதிகரித்ததால் ரஜினி கோபமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
வேட்டையன் படத்துக்கு அடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அந்தப்படங்களுக்கு உத்தேசமாக தேதிகள் சொல்லியிருக்கிறார் ரஜினி.
வேட்டையன் படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்ததால் சொன்னபடி செய்யமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.இதனால்தான் அவர் கோபமாகி சரியாகத் திட்டமிடுங்கள், அதற்கு மேல் தேதிகள் கேட்டால் என்னால் தரமுடியாது என்று சொல்லிவிட்டாராம். அதோடு, வெளியீட்டுத் தேதி குறித்து முடிவு செய்து அவர்களை வேகப்படுத்துங்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடமும் அவர் சொல்லியிருக்கிறார். இதுதான் இப்போதே பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகக் காரணம் என்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்தக் குழுவும் பரபரப்பாகி வேகமாக வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.