அசராத அமீர்… அதிரடியா ‘உயிர்தமிழுக்கு’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் அமீர் சினிமா, அரசியல், சமூகம் என எல்லா தளங்களிலும் கவனத்திற்குரிய மனிதராக 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான காலம் தொடங்கி இன்றுவரை இருந்து வருகிறார்.

கடந்த 22 ஆண்டுகளில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவன் ஆகிய நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் அமீர். கதாநாயகனாக நடித்து வெளியான படம் யோகி வெற்றி பெறவில்லை. இருந்த போதிலும் அமீர் கருத்துகள் சினிமா, அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அமீர் இயக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா தயாரிப்பாளர் சாதிக் போதை பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள விஷயம் எதிரொலித்தது. அவரது தயாரிப்பில் இயக்குநர் அமீர் படமொன்றை இயக்கியுள்ளார். இதன் மூலம் அமீர் அமலாக்க துறையால் விசாரிக்கப்பட்டதுடன் அவரது வீடு, அலுவலகங்கள் சோதனைக்கு உள்ளானது. இது சம்பந்தமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை தமுக்கம் அரங்கில் நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் எந்த விசாரணையும் நான் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் எனக்கூறினார்.

அதற்கு முதல் நாள் மாலை அவர் கதை நாயகனாக நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தில் இடம்பெற்றுள்ள “ஓட்டுக் கேட்டு ஓடி வருவான்” பாடலை தயாரிப்பு தரப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் அமீர் விசாரணைக்காக டெல்லியில் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானர். அதன் பின் எந்த நேரமும் அமீர் கைது செய்யப்படலாம் என்று அவரது சினிமா போட்டியாளர்களும், பாஜகவினரும் கூறிவந்தனர். இந்த சூழலில் ஏப்ரல் 19 அன்று மதுரை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் இயக்குநர் அமீர் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சாதி, மதம் கடந்து தேசத்தின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் என்னுடடைய வாக்கை நான் செலுத்தி விட்டேன். நமது முன்னோர்கள் கட்டி வைத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்திருக்கிறேன். என பாஜகவின் மதவாத அரசியலை மறைமுகமாக குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் திரும்ப வந்திருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் அமீர் கூறியதாவது… இந்தப் படம் மொழியைப் பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையைப் பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தித் திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்தத் தலைப்பு தற்போது அவசியமாகிறது என்றார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவூட்டும் அரசியல் வசனங்கள் நிறைந்துள்ள அந்த முன்னோட்டத்தில் அமீர் பேசும், துப்பாக்கி தோட்டா கொண்டு என் தலையை துளைத்தாலும், பீரங்கியால் என்னைச் சுட்டுப் போட்டாலும் பிரியமுள்ள என் தமிழை உயிரிலிருந்தும் உடலில் இருந்தும் பிரிக்க முடியாது, பிரிக்க நினைப்பவர்கள் உயிர் பிழைக்க முடியாது என்கிற வசனம் தமிழ் மொழி ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் மே 10 ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இயக்குநர் அமீர் ஒரு வழக்கில் சிக்கியிருப்பதால் மன வருத்தத்தில் இருந்த அவரது நலம் விரும்பிகள், சினிமா ரசிகர்கள், அவர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு பட வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் அதைக் கொண்டாடி வருகின்றனர். தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம்பாவா, அமீர் கதையின் நாயகன் அல்ல.கதாநாயகன் தான் என்று கூறியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் தமிழுக்கு படத்தை PVR INOX பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Exit mobile version