நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நாயகனாக நடிக்கும் படம், ‘ஹரா’. விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள இதில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், அனுமோள், வனிதா விஜயகுமார், ராஜேந்திரன், சிங்கம்புலி நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார். பிரகத் முனியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் மோகன் கூறியதாவது:
நான் நடித்த படங்களுக்கு லிஸ்ட் வைத்துக் கொண்டதில்லை. இந்த ‘ஹரா’ தான் என் முதல் படம். நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கென மார்க்கெட் வந்த பிறகு, முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று நினைத்துள்ளேன்.
என் படங்களின் பாடல்கள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு காரணம் இளையராஜா. அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாடல்கள் தந்துள்ளார். அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் ஆர்.சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியதுதான் காரணம். அவர்கள், மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெற செய்தார்கள். அதனால் தான் மக்கள், என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள்.
என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம். நான் எப்போதும் மார்க்கெட் பற்றி யோசிப்பதில்லை. இந்தப் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.