வள்ளுவர் வாழ்க்கை படம் இல்லை ‘திருக்குறள்’

காமராஜ், முதல்வர் மகாத்மா படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் அடுத்து தயாரிக்கும் படம், ‘திருக்குறள்’. இதை, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்க, டி.பி.ராஜேந்திரனுடன் இணைந்து தயாரிக்கிறது. செம்பூர்.கே.ஜெயராஜ் திரைக்கதையை எழுதியுள்ளார். ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வள்ளுவராக கலைச்சோழன் நடிக்கிறார். வாசுகியாக தனலட்சுமி, நக்கீரனாக சுப்ரமணிய சிவா, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் பலர் நடிக்கின்றனர். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

படம் பற்றி இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “பைபிளுக்குப் பின்அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அறத்தை வலியுறுத்த தோன்றிய நீதி நூல் என்றாலும் அது பிரச்சார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதைப் பிரதிபலிக்க முயற்சிக்கிறோம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டையும் படத்தில் பதிவு செய்கிறோம். திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Exit mobile version