திருவண்ணாமலை மாவட்டம் தும்பூர் என்கிற குக்கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் டி.என்.இராவணன். சென்னை லயோலா பள்ளியில் படித்த போது குழந்தைக்கவிஞர் அமரர் அழ.வள்ளியப்பாவால் அடையாளம் காணப்பட்டு எழுத்துலகில் பிரவேசித்தவர் அரசியல்வாதியாக, பல்வேறு மாத இதழ்களை நடத்திய பன்முக பத்திரிகையாளராக கடந்த 72 ஆண்டுகளாக வலம் வந்த ராவணன் முதுமை காரணமாக காலமானார்.
இன்றைய ஊடக உலகில் செய்தியாளனின் ஆயுட்காலாம் நிர்வாகத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் என்னவோ குறைவான அச்சு ஊடகங்கள் இருந்த காலத்திலேயே சுயாதீன பத்திரிகையாளராக தன்னை வடிவமைத்துக் கொண்டார் டி.என்.ராவணன்
நடிகர்களோடு புகைப்படம் எடுத்து அதனை முகநூலில் வெளியிடுவதும், ஸ்டேட்டஸ்சாகவும் வைத்துக் கொள்வதை சாகசமாகவும், சாதனையாகவும், பெருமையாகவும் கருதும் இன்றைய செய்தியாளர்களோடு ஒப்பிடும்போது அமரர் இராவணன் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி, செல்வி ஜெயலலிதா, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த் ஆகியோரோடு பயணித்திருக்கிறார் என்பது பிரமிப்பான விஷயமாக இருந்தாலும், அன்றைய கால கட்டத்தில் அது சாதாரண விஷயமாகவே இருந்தது என கூறியிருக்கிறார். ராவணன் பத்திரிகையுலகில் கையெழுத்து பிரதி தொடங்கி அச்சு ஊடகம், இணைய தளம் என அமரர் கலைப்பூங்கா ராவணன் கடந்து வந்த பாதையின் பதிவு.
நடத்திய பத்திரிகைகள்:
முயல் – கையெழுத்துப் பிரதி, சந்திரஒளி – சிறுவர் இதழ், மான்- சிறுவர் பத்திரிகை, அஞ்சுகம் -மாத இதழ், சிறுவர் சினிமா – மாத இதழ், தேன் நிலா மாத இதழ், தினச்செய்தி -நாளேடு, அண்ணா -வார ஏடு, கலைப்பூங்கா -மாத இதழ், நாவல் எக்ஸ்பிரஸ் – மாத இதழ், போலீஸ் டைரி -மாத இதழ், சஸ்பென்ஸ் – மாத இதழ், உங்கள் மேகலா -மாத இதழ், உங்கள் எதிர்கால விதி- மாத இதழ்.
முதல் அச்சு பத்திரிகை:
மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் எழுத்து, பேச்சால் கவரப்பட்ட இராவணன் அவரின் ஒப்புதலோடு கலைஞர் கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் வாழ்த்துக்களோடு, ‘அண்ணா” என்ற தி.மு.கழக ஆதரவு வார ஏட்டை தொடங்கி பத்து காசு விலையில் நடத்தி வந்தார்.
‘அண்ணா” வார ஏட்டில் திமுக செய்திகளோடு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளையும் இணைத்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதனால் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரது அறிமுகமும், தொடர்பும் கிட்டியதால் ‘கலைப்பூங்கா” என்ற சினிமா பத்திரிகையை மாதமிருமுறை இதழாக 12 காசு விலையில் தினசரி நாளேடு அளவில் தொடங்கினார். காலமாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சியினால் கலைப்பூங்கா கலர்புல் இதழாக 68 வருடங்களாக மாதம் இருமுறை வெளியானது. காலமாற்றத்துக்கு ஏற்ப இணையதளமாக கலைப்பூங்கா சினிமா செய்திகளை வெளியிட்டு வருகிறது.
கலைப்பூங்கா கடந்து வந்த பாதை:
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன், பெரிய இடத்துப் பெண், கொடுத்து வைத்தவள், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கட்டபொம்மன், வசந்த மாளிகை. திரைப்படங்களுக்கு சிறப்பு மலர், கலைஞர் வாழும் காலம் – கலைஞர் 85, – தமிழ் சினிமா 75 சிறப்பு மலர்
கலைஞருக்கு பாராட்டு விழா:
மு.கருணாநிதி 1953 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் பெயரை மாற்றி கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று திமுக நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, அரியலூர் சிறையில் ஆறு மாதம் சிறை தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி சென்னை வந்த மு.கருணாநிதிக்கு, அன்றைய சென்னை நகர துணை மேயர் டி.வேணுகோபால் ராவ் நாயுடு தலைமையில் நடைபெற்ற ஊர்வலம், பொதுக்கூட்டத்தை அன்றைய திமுக எழும்பூர் வட்ட கிளைக் கழகச் செயலாளரும், மாவட்ட பிரதிநிதியும் என்ற முறையில் நடத்தியவர் இராவணன்.
புரட்சி தலைவர் பட்டம் வழங்கிய கலைப்பூங்கா:
எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது அவருக்கு புரட்சித்தலைவர் என்று முதன்முதலில் ஒரு கலையின் குரலாக கலைப்பூங்காவில் பெருமைப்படுத்தியது.
கலைப்பூங்கா பொறுப்பாசிரியராக எஸ்.ஏ.சந்திரசேகர்:
இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்பட ஆர்வத்தில் சென்னை வந்தபோது, அவரை ‘அண்ணா” வார இதழில் புரூப் ரீடராக (பிழை திருத்துபவராக) வாய்ப்பு வழங்கி பின்னர் ‘கலைப்பூங்கா’ தொடங்கிய போது அதன் பொறுப்பு ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கியது கலைப்பூங்கா.
விஜய் புகைப்படத்தை முதலில் வெளியிட்ட பத்திரிகை:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜயின் புகைப்படத்தை கலைப்பூங்காவின் இணைப்பு இதழான சஸ்பென்ஸ் மாத இதழில் வண்ண முகப்பு அட்டையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது கலைப்பூங்கா.
தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் துணைத் தலைவர்.
தமிழ்நாடு சிறு, நடுத்தர, பத்திரிகையாளர் சங்க செயலாளர்.
தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நிறுவனர்களில் ஒருவராக முன்னணியில் இருந்து செயல்பட்டார். இறுதிவரை கௌரவ ஆலோசகராக இருந்து வந்தார்.
பத்திரிகையாளராக பெற்ற விருதுகள்:
வி.ஜி.பி நிறுவனம் 1984 ஆம் ஆண்டு நடத்திய பாராட்டு விழாவில் சால்வை அணிவித்து பாராட்டு மடலும், ஆயிரம் ரூபாய் கொண்ட பொற்கிழியும் வழங்கப்பட்டது.
தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளருக்கான பாராட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம், ஏவி.எம்.குமரன் அவர்களால் வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றவிழாவில் சால்வை போர்த்தி ஒரு சவரன் தங்கப் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வாழ்த்து மடலும் வழங்கப்பட்டது.
V4 எண்டர்டெயினர்ஸ் சார்பில் எம்ஜிஆர் &சிவாஜி அகடமி அவார்டு, 2015- 2016 ஆம் ஆண்டிற்குரிய சிறப்பு விருது 1-1-2017 அன்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
15-8-2018 ஆண்டில் சுதந்திர தினத்தில் நடிகர் கே.பாக்யராஜ் அவர்களால் 70 ஆண்டுகள் கலையுலக சேவைக்காக நடிகர் பாக்யராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.