நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை குவியம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், லால்குடி எம். ஹரிஹரன் தயாரிக்கிறார். இந்த நிறுவனம் ஏற்கனவே குவியம் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் பல வெற்றிப் படங்களுக்கு இறுதிக்கட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகளில், லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணா குமார் கூறுகையில், நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.