தனுஷின் “ராயன்” திரைவிமர்சனம்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், ஏ.ஆர் ரகுமான் இசையில், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி, சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில், தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் “ராயன்”.

கதைப்படி.. இளம் வயதில், வெளியே சென்ற பெற்றோர் வீடு திரும்பாத காரணத்தால், காத்தவராயன் ( தனுஷ் ), முத்துவேல், மாணிக்கவேல் ( சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ) இரண்டு தம்பிகள், தங்கை துர்காவுடன் ( துஷாரா விஜயன் ) பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறார். இவர்களுக்கு சேகர் என்பவர் ( செல்வராகவன் ) அடைக்கலம் கொடுக்கிறார். இளம் வயதிலிருந்தே வேலைக்குச் சென்று தனது இரண்டு தம்பிகளையும், தங்கையையும் வளர்த்து ஆளாக்குகிறார்.

பின்னர் அந்தப் பகுதியின் தாதா துரை ( சரவணன் ) உதவியில் பாஸ்ட் புட் கடையை நடத்தி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, மாமுல் வசூலிப்பது உள்ளிட்ட தொழிலில் சேதுவுக்கும் ( எஸ் ஜே சூர்யா ) துரைக்கும் நீண்டநாள் பகை இருந்து வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதை நிறுத்திக் கொண்டு அவரவர் தொழிலைத் தொடரும் நிலையில், அவர்களுக்குள் பிரச்சினையை உருவாக்க திட்டம் தீட்டுகிறார் உயர் போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ். இதற்கிடையில் முத்துவேல் ஒயின் ஷாப்பில் குடித்துவிட்டு சண்டை போடுகிறார். அப்போது நடந்த மோதலில் துரையின் மகன் இறந்து போகிறார். சேதுவின் ஆட்களும் அங்கே இருக்கின்றனர். ஆனால் துரை சேதுவின் ஆட்கள்தான் மகனை கொலை செய்திருப்பார்கள் என சந்தேகப்படுகிறார்.

இந்த இரண்டு ரௌடி கும்பலுக்கு இடையில், காத்தவராயனின் குடும்பம் எப்படி சிக்குகிறது ? பிரகாஷ் ராஜின் திட்டம் நிறைவேறியதா ? அதிலிருந்து மீள என்ன செய்கிறார் ராயன் ? என்பதே மீதிக்கதை…

தனுஷ் சிறுவயதிலிருந்தே தனது தம்பி தங்கைக்காகவே வாழும் அண்ணனாக நடித்திருக்கிறார் என்பதைவிட, குடும்பம், சென்டிமென்ட் என அந்த காதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்பத்திலிருந்து இறுதிக்காட்சி வரை சலிப்பு தட்டாமல் திரைக்கதை நகர்த்தியதோடு, ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, அற்புதமான வசனங்களுடன் இயக்குநர் பணியையும் மேற்கொண்டுள்ளார். தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி, நடித்துள்ள தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, சரவணன், செல்வராகவன், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, இளவரசு உள்ளிட்ட அத்தனை நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதைக் கவரும் வகையில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஓம் பிரகாஷ், ஆரம்பம் முதல் இறுதிவரை சீரான லைட்டிங், ஒரே மாதிரியான கலர் டோன் என சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

ஏ ஆர் ரஹ்மானின் இசை, ராயனின் வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. பாடல் காட்சிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி, ஆட வைத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

Exit mobile version