வெங்கட்பிரபு இயக்கத்தில்
நடிகர் விஜய்யின் 68-வது படமாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம், வட இந்தியா தவிர்த்து 4500 திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 700 திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ படங்களைக் காட்டிலும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் நடித்துள்ள படம் “கோட்”. அதே போன்று விஜய் நடிக்க இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சம்பளம் வாங்கியுள்ள படம் என்பதால் தயாரிப்பு செலவும், 400 கோடி ரூபாய் என்பது தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் இளம் வயது விஐய், மறைந்த நடிகர் விஜயகாந்த், சில வரி வசனத்தை பேச சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி என படத்தில் இருக்கிறார்கள் என படம் வெளியாகும் முன்னரே தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட்பிரபு இருவரும் தேர்வு செய்யப்பட்ட முண்ணனி ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டி கொடுத்தனர்.
அர்சனா கல்பாத்தியை, நடிகை சுகாசினி முன்னணி யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி எடுத்தது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு கூட்டமாக சென்று பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழு, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ்சினிமா பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்து செய்து, ஊடக சந்திப்பை தவிர்த்தது. 10 லட்சம் பார்வையாளர்கள் உள்ள யூ டியூப் சேனல்களுக்கு மட்டுமே படக்குழுவினர் பேட்டி கொடுப்பார்கள் என கூறப்பட்டது.
அஜித்குமார் போன்றே தான் நடிக்கும் படங்கள் சம்பந்தமான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்பதை தவிர்த்து வந்தவர் நடிகர் விஜய். 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோட் படத்திற்கு இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த தேதி கொடுக்கவில்லை. அதனால் வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களுக்கு நடைபெறும் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று வெளியான கோட் திரைப்படம் மெட்ரோ நகரங்களில் உள்ள திரையரங்குகள், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மால் தியேட்டர்களில் மட்டும் 100% வீதம் டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனையானது. புறநகர், சிறு நகரங்கள், குக்கிராமங்களில் இருக்கும் தனித் திரையரங்குகளில் 60 சதவீத இருக்கைகள் நிரம்பியது. நகர்புறங்களை போன்று 100 சதவீதம் விற்பனை ஆகவில்லை. விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், தனிப்பட்ட முறையில் தனித்திரையரங்குகளில் காலை 9 மணி சிறப்புக்காட்சிக்கான மொத்த டிக்கெட்டையும் வாங்கி 300 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.
பல ஊர்களில் முதல் நாள் மொத்த காட்சிகளுக்கான டிக்கட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். மால் திரையரங்குகளில் மட்டுமே அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. மற்ற திரையரங்குகளில் “கோட்” படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் அரசு நிர்ணயித்த டிக்கட் கட்டணத்தை காட்டிலும் அதிக விலைக்கு விற்குமாறு கூறியிருந்தனர். கோட் படத்தின் முதல் காட்சி முடிந்த பின் புறநகர்களில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மொத்தமாக வாங்கி வைத்து இருந்த டிக்கெட்டுகளின் விலை குறைக்கப்பட்டது. இருந்த போதும் 100 சதவீத டிக்கெட்டுகள் விற்பனை ஆகவில்லை.
நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் “கோட்” திரைப்படம் 22.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. 2023 அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான “லியோ” திரைப்படம் தமிழ்நாட்டில் 38.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருந்த நிலையில், தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தும் “கோட்” படம் “லியோ” படத்தின் முதல் நாள் வசூலான 38.50 கோடி மொத்த வசூலை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று, கோட் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் இரட்டை இலக்கத்தில் பார்வையாளர்கள் வருகையுடன் படம் ஓடத்தொடங்கியுள்ளது. முதல் நாளில் 60 சதவீதமான இருக்கைகள் நிரம்பிய நிலையில், 20 சதவீதமான இருக்கைகளே நிரம்பியுள்ளது. நாளையதினம் இதன் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…