‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியான படம் ‘மெய்யழகன்’. இப்படம் 2 மணி நேரம் 57 நிமிடம் ஓடும் படமாக இருந்தது. படத்தின் நீளம் மிகவும் அதிகம் என படம் வெளியீட்டுக்கு முன்பாக, தமிழ்நாடு, திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருந்த போதிலும் எல்லாம் அறிந்த ஏகம்பரம், நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என நான் இறுதி செய்தது தான் படம். உங்கள் விருப்பபடி நீளத்தை, நேரத்தை குறைக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குநர் பிரேம்குமார்.
படம் தியேட்டரில் வெளியான பின்பு படத்துக்கு எதிராக விமர்சனங்கள் வெளியானது. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் படத்தின் திரைக்கதைக்கு சம்பந்தமில்லாமல் படத்தின் வேகத்தை, அதன் தடத்தை மாற்றுகிறது என பலரும் கூறியிருந்தார்கள். ஆனாலும், இயக்குநர் பிரேம்குமார் நீளத்தைக் குறைக்கவும், காட்சிகளை வெட்டவும் மாட்டேன் என பிடிவாதமாக இருந்திருக்கிறார்.
இனியும் நீங்கள் அடம்பிடித்தால் படம் வசூலில் பப்படம் ஆகிவிடும் என்று தயாரிப்பு தரப்பில் நீளத்தை குறைத்து விட்டனர். இருந்த போதிலும் இயக்குநரே இதனை செய்ததாக அறிக்கை வெளியிடுமாறு பிரேம்குமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது படத்தில் 18 நிமிடங்கள் 42 நொடிகள் காட்சிகள் நீக்கப்பட்டு 2 மணி நேரம் 38 நிமிடங்கள் மட்டுமே ஓடும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ராஜசேகர், நாயகன் கார்த்தி, வினியோகஸ்தர் சக்திவேல் ஆகியோர் இன்று வரை தன்னை அரவணைத்து, எல்லா சூழலிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்கள். இப்போதும் இந்த நேரக் குறைப்பு செய்யும், என் முடிவிற்கு உடன் நிற்கிறார்கள், என அவரே குறைத்தது போல கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக அறிக்கையில் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார். படத்தில் இடம் பெற்ற ‘ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள், சோழர் காலத்திலிருந்து கார்த்தி கதை சொல்லும் காட்சிகள், அரவிந்த்சாமி கோவிலுக்குச் செல்லும் காட்சிகள்” உள்ளிட்டவை அப்படியே தூக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதை முதலிலேயே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே திரையரங்கினர் அபிப்பிராயமாக இருக்கிறது.