தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ என்ற விஜயகாந்த் பட பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை படம் பார்க்கும் பார்வையாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு, ‘லப்பர் பந்து’ படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். அப்போது ‘லப்பர் பந்து’ படத்தினைப் பார்க்க கோரிக்கை விடுத்தார்கள்.
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள், காட்சிகளை புதிய திரைப்படங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அப்படி பயன்படுத்தப்படும் படங்கள் வெற்றி பெற்றால் அதனை பற்றிய விவாதம் நடைபெறும். அப்படிப்பட்ட விவாதத்தை’லப்பர் பந்து’ திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக் ஆகியோர் உச்சத்தில் இருந்த போது தமிழ் சினிமாவில் தனி ஆவர்த்தனம் நடத்தியவர் நடிகர் விஜயகாந்த். தமிழ்நாட்டின் கடைகோடி கிராமம் வரை அவருக்கு ரசிகர் மன்றம் இருந்தது. அதனால் விஜயகாந்த் நடிக்கும் படங்களில் நடிக்கும் திரைக்கலைஞர்கள் சாமான்ய மக்களை சென்று அடைந்தனர். இதனால் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் நாயகனாக நடிக்கும் படங்கள் சாமான்ய மக்களை சென்றடைய விஜயகாந்த் உதவியை நாடினார். மற்றொரு நடிகர் வளர்வதற்கு தன்னுடைய புகழ்வெளிச்சம் வணிக ரீதியாக பயன்படுத்தபடுகிறது என்ற நோக்கத்தில் பார்க்காமல், விஜய் நடித்த ‘செந்தூர பாண்டி’ படத்தில் நடித்தார் விஜயகாந்த். அந்தப் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதுடன் கடைகோடி கிராமம் வரை விஜய் சென்றடைய காரணமானது. நடிகர் விஜயகாந்த் மறைந்த பின் அவரைத் திரையுலகம் நினைவு கூறி பெருமைப்படுத்தகூடிய நிகழ்ச்சிகளை, விழாக்களை நடத்தவில்லை.
இந்த நிலையில் விஜய் நடித்து வெளிவந்த ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த்தை கௌரவ படுத்தும், நினைவு கூறத் தக்க காட்சி இடம்பெறும் என அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு அடிக்கடி கூறி வந்தார். அதனால் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அரசியல், சினிமா என எல்லா மட்டங்களிலும் ஏற்பட்டது. ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் உருவாக்குகிறோம் என ஒரே ஒரு காட்சியில் அவரது தோற்றத்தை இடம் பெற வைத்தனர். அதையும் ஒரு முகமூடி போலக் காட்டி அந்த முகமூடியை விஜய் அணிந்து வந்ததாகக் காட்டினார்கள். விஜயகாந்த் ரசிகர்களிடம் மட்டுமல்ல சினிமா, அரசியல் என எல்லா மட்டங்களிலும் விமர்சனத்திற்குள்ளானது. தனித்த ஆளுமையான விஜயகாந்த்தை விஜய் முகமூடியாக பயன்படுத்துவதா என்கிற விமர்சனங்கள் வெளிப்பட்டது.
ஆனால், செப்டம்பர் 20 ஆம் தேதி வெளிவந்த ‘லப்பர் பந்து’ படத்தில் படத்தின் கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷை, விஜயகாந்த்தின் ரசிகராகக் காட்டினர். அவரது வீட்டு வெளியே விஜயகாந்தின் உருவப் படத்தை வரைந்து வைத்தனர். அதோடு 1989 ஆம் ஆண்டு றி. வாசு இயக்கத்தில் விஜயகாந்த்,, சோபனா, சரோஜா தேவி ஆகியோர் நடிப்பில் வெளியான பொன் மனசெல்வன் படத்தில இடம் பெற்ற ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்கவிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் லப்பர் பந்து வெளியான திரையரங்குகளில் ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் வரிகள் ஒலிக்கும் போது திரையரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்து வருகிறது. இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் ஆன பின்பும், இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களால் ரசிக்கப்படுவதும், கொண்டாடப்படுவதற்கும் காரணம் அந்தப்படலை செயற்கை தனம் இல்லாமல் அதன் இயல்பு தன்மையுடன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் சரியாக இணைத்தது என்கிறது திரையரங்க வட்டாரம். இந்த வருட தொடக்கத்தில் வெளியான மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் குணா பட பாடல்கள் எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசித்து கொண்டாடப்பட்டது. அதை விட பன்மடங்கு ‘பொட்டு வைத்த தங்க குடம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
படக்குழு வேண்டுகோளை ஏற்று பிரேமலதா விஜயகாந்த் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ரப்பர் பந்து படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போது “பலரும் ’லப்பர் பந்து’ படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். இன்று தான் எங்களின் குடும்பம், கட்சி சார்பாக இந்தப் படத்தைப் பார்த்தோம். அனைவருக்குமே மகிழ்ச்சி. ஒவ்வொரு காட்சியிலுமே விஜயகாந்த்தின் தாக்கம் இருந்தது. இந்தப் படம் பெரும் வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி. தேர்தல் களத்தில் பேசி முடித்தவுடன் ’பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் தான் போடுவோம். எங்களுடைய வாகனத்தில் இந்தப் பாடல் தான் ஒலிக்கும். எங்கள் கட்சியின் மிக முக்கியமான ஒரு பாடல் இது. அதனை இயக்குநர் சரியான முறையில் உபயோகித்திருக்கிறார். அதற்கு பாராட்டுகள். இதே போன்று சண்முக பாண்டியன் நடிக்கும் படங்களிலும் பாடல்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
‘கோட்’ படத்தில் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியது குறித்து கேட்ட போது “‘கோட்’ படத்தினை நான் இன்னும் பார்க்கவில்லை. மகன்கள் பார்த்துவிட்டு ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உபயோகித்திருப்பதாக சொன்னார்கள். படத்தின் தொடக்கத்திலேயே வந்துவிடுவதாகவும் கூறினார்கள். விஜயகாந்த் நடித்த ‘ராஜதுரை’ படம் பார்த்த மாதிரியே இருந்ததாக பலரும் சொன்னார்கள். படம் வெற்றியடைந்துவிட்டது, இனி அதைப் பற்றி கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ‘கோட்’ படத்தில் விஜயகாந்த்தை உபயோகிப்பதற்கு பலமுறை என்னை சந்தித்து பேசி அனுமதி பெற்று தான் உபயோகித்தார்கள். அது முறையான விஷயம். இந்தப் படத்தில் விஜயகாந்த் நேரடியாக இல்லையென்றாலும், அவரை பாடல், ஓவியம் மூலமாக கொண்டு வந்துள்ளார்கள். அதனை மக்கள் கொண்டாடுகிறார்கள். விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, அவர் மக்கள் சொத்து. அவருடைய நினைவுகளை கொண்டாடுவதை வரவேற்கிறோம்” என்று கூறினார்.
விஜயகாந்த் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிப்பீர்களா என கேட்ட போது, “விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது” என்றார் பிரேமலதா விஜயகாந்த்.